Title
stringlengths
21
197
Author
stringlengths
4
27
City
stringlengths
3
20
Published
stringlengths
19
19
Text
stringlengths
149
24k
இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய அரசு தீர்வு காண முத்தரசன் கோரிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 14:33:00
சென்னை: கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் அட்டூழியமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, “கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் அட்டூழியமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் இலங்கை நீதிமன்றம் மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மீனவர் சமூகத்தில் கடுமையான கொந்தளிப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு, ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நம்பிக்கை அளிக்கும் செய்தி ஏதும் கிடைக்காத நிலையில் நாளையும், நாளை மறுதினமும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவை புறக்கணிக்க வேண்டிய தீவிர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீனவர்களின் உணர்வை பிரதிபலிக்கும் முறையிலும், இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் முறையிலும், மீனவர்கள் போராட்டத்துக்கு, அருட்திரு பங்கு தந்தையும் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் ஒட்டு மொத்தமாக போராட்டக் களம் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசின் கவனத்துக்கு சுட்டிக் காட்டுவதுடன் உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையில் சிறை தண்டனை பெற்றுள்ள மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிடுத்து, நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. வாழ்வுரிமை பாதுகாப்புக்கான மீனவர்கள் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஆதரித்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிப்.26-ல் கலைஞர் நினைவிடம் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு @ சட்டப்பேரவை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 13:56:00
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் 26-ம் தேதி திறக்கப்படவுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கலைஞர் நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது. அறிஞர் அண்ணா நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. புதுப்பிக்கப்பட்டிருக்கக் கூடிய பேரறிஞர் அண்ணா நினைவிடமும், கலைஞர் புதிய நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன. எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம்; முடிவெடுத்திருக்கிறோம். ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” - முதல்வர் @ தமிழக சட்டப்பேரவை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 13:46:00
சென்னை: “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று பாமக உறுப்பினர்கள் இன்று (வியாழக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் குரல் கொடுத்தனர். ஆனால், ஆளுநர் உரையில் இதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி இதுகுறித்து பேரவையில் விவாதிக்க மறுக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து பாமக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு பிரச்சினை பண்ண வேண்டும் என்றே கூச்சல் எழுப்புகிறீர்கள். ஏற்கெனவே ஆளுநர் உரையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கணக்கெடுத்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். நீங்கள் அரசியலுக்காகவோ அல்லது எதற்காகவோ மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள். மாநில அரசு எடுக்க வேண்டிய அவசியமில்லை. மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தினாலும், அதனை நடைமுறைபடுத்துவதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த அரசியலமைப்பு சட்டப்படி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றிய அரசு மட்டும்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும். முதல்வர் ஸ்டாலினும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். உங்களின் கருத்தோடு ஒத்த கருத்தாக முதல்வரும், இந்த அரசும் உள்ளது.” என்றார். பின்பு விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், “சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஏற்கனவே இந்த அவையில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டிலும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி, வேல்முருகன், ஜி.கே.மணி போன்றோர் இதுகுறித்து என்னிடம் நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்கள். அப்போதே இதுகுறித்து விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிராளிகள் அல்ல. உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
மேகேதாட்டு | தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட கர்நாடகம் வைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 13:24:00
சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது என்று சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வின்போது மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், “காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதியானது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீண்டகாலம் தலைவரே நியமிக்கப்படாமல் இருந்தது. அதனால் அதிமுக ஆட்சியில் பிரச்சினை வரவில்லை. இம்மாதம் 11-ம் தேதி நடந்த கூட்டத்தில் மேகேதாட்டு பிரச்சினை வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவிரி ஆணையத்தில் மேகேதாட்டு பிரச்சினை பற்றி விவாதிக்க கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளதையும் அன்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம். ஆனால் கர்நாடகாவோ, 'உச்ச நீதிமன்றம் அணை கட்டும் திட்டத்துக்கு எந்த தடையும் பிறப்பிக்கவில்லை. எனவே இத்திட்டம் பற்றி விவாதித்து, முடிவெடுத்து மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம்' என்றது. மத்திய நீர் ஆணையத்தில் ஒன்றிய அரசின் சார்பில் உள்ள உறுப்பினரோ இது முடியாது என்றார். கேரளா, பாண்டிச்சேரியும் இதேபோல் விவாதிக்க முடியாது என்று தெரிவித்தனர். அன்று எந்தவித ஓட்டெடுப்பும் நடக்கவில்லை. கருத்துக்கள் மட்டுமே சொல்லப்பட்டது. கர்நாடகாவை தவிர, மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மேகேதாட்டு திட்டத்தை திருப்பி அனுப்ப காவிரி ஆணைய தலைவர் ஒப்புக்கொண்டார். திருப்பி அனுப்ப ஒப்புக்கொண்ட இதே ஆணைய தலைவரே, மேகேதாட்டு திட்ட அறிக்கையை பரிசீலிக்க காவிரி ஆணையத்துக்கு மீண்டும் அனுப்ப உள்ளதாக நமக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு உடனே தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். ஜல்சக்தி அமைச்சகம், வனத்துறைக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் மேகேதாட்டு திட்டம் அனுமதிக்கப்படவில்லை எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் மேகேதாட்டுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகாவில் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். பாஜக, காங்கிரஸ் என யார் வந்தாலும் இதைத்தான் செய்கிறார்கள். சித்தராமையா எனக்கு வேண்டியவர் தான். அவரும் அப்போது இருந்தே இந்த விஷயத்தில் இப்படித்தான் செய்கிறார். அவர்கள் நிதி ஒதுக்கினாலோ, மேகேதாட்டுவை கட்டியே தீருவோம் என்று ஆவேசமாக வசனம் பேசினாலோ அச்சப்படத் தேவையில்லை. காரணம் தமிழ்நாட்டின் இசைவின்றி அனுமதியை பெற முடியாது. தமிழ்நாட்டில் பிறந்த யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மேகேதாட்டுவுக்கு அனுமதியை தர மாட்டார்கள். எனவே அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு காங்கிரஸ் உடன் கூட்டணி இருக்கிறதே பேசக்கூடாதா என்கிறார்கள். பேசக்கூடாது என்பதே திட்டம். காரணம் பேசிப்பேசி அலுத்து போய் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிக்கு எவ்வளவு அக்கறை, ஆர்வம், வேகம் இருக்கிறதோ அதே வேகம், அதே அக்கறை, அதே உணர்வு எங்களுக்கும் உண்டு.” என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 12:55:00
சென்னை: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (22.02.2024) பணி நியமன ஆணையினை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “முதல்வரின் அறிவுறுத்தலோடு கடந்த 6.02.2024 அன்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,021 மருத்துவ பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அந்த 1021 மருத்துவர்களும் 15 நாட்கள் கால அவகாசத்துக்குள் பணியில் சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் 90 சதவிகித்திற்கு மேலான மருத்துவர்கள் தற்போது தமது பணியிடங்களுக்குச் சென்று பணியினை மேற்கொண்டிருக்கிறார்கள். அதே போல் கடந்த 11.02.2024 அன்று 977 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கும் 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த துறையில் காலியாக இருக்கிற ஆய்வக நுட்புனர்கள் பணியிடங்கள் 332 நிரப்புவதற்குறிய நடவடிக்கைகளை முதல்வரின் அறிவுறுத்தலோடு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் அதற்கான அனைத்து பணிகளையும் முடித்து நேற்றைக்கு முன்தினம் அந்த பட்டியல் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரிடம் தரப்பட்டது. இந்த துறையில் கடந்த 3 நிகழ்வுகளாக 6.02.2024, 11.02.2024 மற்றும் இன்று 22.02.2024 ஆகிய நாட்களில் நடைபெற்ற பணி நியமன உத்தரவுகள், இந்தியாவிலேயே முதல்முறையாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு என்கின்ற வகையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிநியன ஆணைகள் வழங்கப்பட்டது. அதேபோல் நேற்று (21.02.2024) ஒரே நாளில் இந்த 332 ஆய்வக நுட்புனர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவரவர்கள் விரும்புகிற இடங்களுக்கு அவர்கள் தேர்வு செய்து பணிநியமன ஆணைகள் பெற்றிருக்கிறார்கள். தற்போது 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம். பணி ஆணைகளை பெறும்போது அவரவர் சொந்த பகுதிகளிலேயே பணி ஆணை கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அங்கேயே நாங்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்புகள் தந்த அரசிற்கு நன்றியினை தெரிவித்தார்கள். இன்னமும் இந்த துறையைப் பொறுத்தவரை பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற சூழ்நிலையில் 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 ஆக மொத்தம் 5100 பேரை தேர்வு செய்வதற்குரிய பணிகளை மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (MRB) செய்து கொண்டிருக்கிறது. அப்பணிகளும் இறுதி நிலைக்கு வந்துள்ளது. அந்த வழக்குகளையெல்லாம் நமது துறையின் செயலாளர் அவர்கள் நல்ல தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலோடு, 5100 பணியிடங்களும் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதாவது கடந்த 06.02.2024 அன்று 1021 மருத்துவர்களுக்கும், 11.02.2024 அன்று 977 தற்காலிக செவிலியர்களுக்கும், இன்று (22.02.2024) 332 ஆய்வக நுட்புனர்கள் என ஏறத்தாழ 2,200க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் கடந்த 20 நாட்களிலேயே நிரப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 11:48:00
சென்னை: தமிழகத்தில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3500-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை விட குறைவாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.5000 வழங்க முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா முழுவதும் 2024-25 ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு 3,400 ரூபாயும், 9.50% அல்லது அதற்கும் குறைவானத் திறன் கொண்ட கரும்புக்கு 3150 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50% தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ரூ.3150 மட்டும் தான் கிடைக்கும். கரும்புக்கு இந்த விலை போதுமானதல்ல. தமிழகத்தில் விளைவிக்கப்படும் கரும்புகளுக்கு கடந்த ஆண்டில் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,919 வழங்கப்பட்டது. இப்போது ரூ.231 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 8% மட்டுமே உயர்வு ஆகும். இந்த கொள்முதல் விலையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3500-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை விட குறைவாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்கும் முறையை ஐந்தாண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிடுவதில் நிலத்திற்கான குத்தகைத் தொகை உள்ளிட்ட பல செலவுகள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பதற்கு இது தான் முக்கியக் காரணம் ஆகும். இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத் தான் நிலத்தின் குத்தகைத் தொகை உள்ளிட்ட செலவுகளையும் உற்பத்திச் செலவுடன் சேர்க்க வேண்டும். அதை உறுதி செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் தான் கொள்முதல் விலை சிக்கலுக்கு தீர்வு ஏற்படும். தமிழகத்தில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1750 சேர்த்து டன்னுக்கு ரூ.5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ.5000 ஆவது வழங்க வேண்டும். மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கு | முக்கிய நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-22 11:45:00
சென்னை: ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகியும் நான்காவது குற்றவாளியுமான சவுந்தரராஜன் என்பவர் ஜாமீன் கோரி நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.தனசேகரன் முன்பாக நடைபெற்றது. அப்போது சவுந்தரராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சவுந்தரராஜன் தானக முன்வந்து சரணடைந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அசையும் மற்றும் அசையா சொத்துகள் என 96 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். புகாரை நிரூபிக்கும் வகையில் காவல்துறையின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், 16,500 நபர்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளதாகவும், 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாடு தப்பிச் செல்லவும், சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்க வாய்ப்புள்ளது. மேலும் மீட்க வேண்டிய தொகை அதிகம். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் D. செல்வம் ஆஜராகி, சவுந்தரராஜனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில் சவுந்தரராஜனுக்கு ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மனித - விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை உறுதி செய்க: அன்புமணி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 11:09:00
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மனித - விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் மனித, விலங்குகள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில், அதிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் மனித ,விலங்குகள் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மனித , விலங்குகள் மோதலுக்கு வனப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு, வனப்பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்தல், யானைகள் வலம் வரும் பகுதிகள் மனிதர்களால் அழிக்கப்படுதல் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட இந்தத் தவறுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், அவற்றின் மூலம் இதுவரை எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை, இனி கிடைக்குமா? என்பதும் தெரியவில்லை. மனித, விலங்குகள் மோதலால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருள் இழப்புகளும் மிக அதிகமாக ஏற்படுகின்றன. ஜனவரி 17 ஆம் நாள் முதல் பிப்ரவரி 19 வரையிலான 32 நாட்களில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் தாக்கி மூன்று பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் இறந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் புலிகள் மற்றும் யானைகள் தாக்கி 1700 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தமிழகத்தில் யானைகள் தாக்குதலில் மட்டும் 152 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. மற்றொருபுறம் வன விலங்குகள் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன. விலங்குகள் தாக்குதலில் கொல்லப்படுவோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், விலங்குகளால் கொல்லப்படும் உயிர்களுக்கும், சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. சில பகுதிகளில் முதல்கட்ட இழப்பீட்டை மட்டும் வழங்கும் தமிழக அரசு, மீதத் தொகையை வழங்கவில்லை. வன விலங்குகளால் மக்களும், பயிர்களும் அழிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை விட, வன விலங்குகளால் மனிதர்களும், பயிர்களும் தாக்கப்படுவதை தடுப்பது தான் சிறந்தத் தீர்வாக இருக்கும். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வருவதை உடனடியாக தடுப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை. மாறாக, வனத்தை விட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெளியே வருவதை கண்காணித்து, அவற்றை மீண்டும் வனத்திற்குள் அனுப்பி வைப்பது தான் பயனளிக்கும் தீர்வாக இருக்கும். அதற்காக தனிப்படைகள் அமைக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், ஆக்கப்பூர்வமான இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு இன்னும் சிந்திக்கக் கூட இல்லை என்பது தான் உண்மை. ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் மனித விலங்கு மோதல் பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. அதை சமாளிப்பதற்காக அந்த மாநிலங்களில் ஒவ்வொரு சரகத்திலும் வனச்சரக அலுவலர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படைகளுக்கு போதிய எண்ணிக்கையில் வனக்காவலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வாகனம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அப்படைகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் ஆந்திரம், கர்நாடகத்தில் மனித வன விலங்குகள் மோதல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருக்கின்றன. அதேபோல், இந்த வனச்சரகத்தின் பரப்பளவு குறைக்கப்பட்டு புதிய சரகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி சார் ஆய்வாளர் நிலையிலான வனக்காப்பாளர் 2500 ஹெக்டர் முதல் 5000 ஹெக்டர் வரை பரப்பளவு கொண்ட ஒரு வனக் காவல் சுற்று பகுதியை கண்காணிப்பதும், காவல் ஆய்வாளர் நிலையிலான வனச்சரக அலுவலர் 30,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனச்சரகத்தை கண்காணிப்பதும் சாத்தியமற்றவை. வனக்காவல் சுற்றுப்பகுதியின் பரப்பளவை 1000 ஹெக்டேராகவும், வனச்சரகத்தின் பரப்பளவை 5000 ஹெக்டேராகவும் குறைப்பதன் மூலம் வனப்பகுதிகளை சிறப்பாக நிர்வகிக்க முடியும். எனவே, தமிழக வனத்துறையில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுபுவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும்; வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்க வேண்டும். கோடைக்காலத்தில் வனத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விலங்குகள் ஊர்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எந்தெந்த வனப்பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அங்கெல்லாம் விலங்குகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்தில் மனித விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்: திமுக, காங்., வெளிநடப்பு
செ. ஞானபிரகாஷ்
புதுச்சேரி
2024-02-22 11:02:00
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (பிப்.22) ஐந்து மாத செலவுக்கான ரூ.4634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். புதுவை சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுவை சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது. துவக்கத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அதையடுத்து காங்கிரஸைச் சேர்ந்த வைத்தியநாதன், திமுகவைச் சேர்ந்த நாஜிம், சுயேட்சை எம்எல்ஏ நேரு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேசினர். சிலை அமைக்க கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து மறைந்த எம்எஸ் சுவாமிநாதன், பங்காரு அடிகளார், சங்கரய்யா, பாத்திமா பீவி, நடிகர் விஜயகாந்த் ஆகியோரின் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத செலவினங்களுக்கு ரூ. 4634 கோடி 29 லட்சத்து 89 ஆயிரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா எழுந்து பேசும்போது, “மத்திய அரசு நிதி ஒதுக்கிவிட்டார்கள். முழு பட்ஜெட்டை முயற்சி எடுத்திருந்தால் போட்டிருக்கலாம். ஆளுநர் பிரச்சினையால் அனுப்பவில்லையா. பத்து ஆண்டுகள் பின்தங்கிவிட்டனர். வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அலட்சியமாக கோஷ்டி பூசலால் தவற விட்டுள்ளீர்கள். புதுச்சேரிக்கு பிரச்சினை அதிகமாக இருக்கிறது. 3 நாட்களாவது கூட்டத்தை நடத்தலாம். கலந்து பேசினால் அதிகாரிகளுக்கு தெரியும். அடுத்து ஆறு மாதங்கள் கழித்துதான் கூட்டத்தை நடத்துவீர்கள். அதனால் வெளிநடப்பு செய்கிறேன்” என்றார். இந்நிலையில் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அறிக்கைகளை வாசித்தார். அதையடுத்து எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் விழா: ஒரே மேடையில் பிரதமர், முதல்வர்
செய்திப்பிரிவு
நெல்லை
2024-02-22 10:56:00
நெல்லை: இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள நிலையில், இதற்கான அடிக்கல்லை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி நாட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் இந்நிகழ்ச்சியில் பிரதமரும், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கவுள்ளனர். வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அன்று இரவு சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தங்குகிறார். ராக்கெட் ஏவுதளம்: திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 28-ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கோவை சூலூரில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். பின்னர், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி, வஉசி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி வைக்கிறார். ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரதமர் உடன் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அரசியல் ரீதியாக திமுக - பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. தேர்தல் வரவுள்ளதை அடுத்து இம்மோதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் ஒரே மேடையை பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.
மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை அரசுப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக நடத்துநர், ஓட்டுநர் பணியிடை நீக்கம்
செய்திப்பிரிவு
அரூர்
2024-02-22 06:34:00
அரூர்: தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கம்பைநல்லூர் அடுத்த நவலைகிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் நேற்று முன்தினம் அரூரில் இருந்து ஓசூர் செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது ஒரு பாத்திரத்தில் அவர் மாட்டு இறைச்சியை எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய அரூர் சின்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரகு(54) என்பவர், மாட்டு இறைச்சி எடுத்துச் சென்றதை காரணம் காட்டி, மோப்பிரிப்பட்டி பகுதியில் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். பேருந்தை வழிமறித்து... பின்னர், வேறு பேருந்து மூலம் பாஞ்சாலை வீட்டுக்கு சென்றுள்ளார். நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்ற பேருந்து மீண்டும் அன்று இரவு அரூர் நோக்கி வந்தபோது, பாஞ்சாலையின் குடும்பத்தார் மற்றும் கிராம மக்கள் சிலர் நவலை கிராமம் அருகே பேருந்தை வழிமறித்து, பாஞ்சாலையை நடுவழியில் இறக்கிவிட்டது குறித்து கேட்டபோது, தான் அவ்வாறு செய்யவில்லை என்று நடத்துநர் ரகு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்த சம்பவம்குறித்து அறிந்த அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.தொடர்ந்து, அரசுப் பேருந்து நடத்துநர்ரகு, ஓட்டுநர் சசிக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம்செய்து போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டவட்டம்
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-22 06:10:00
மதுரை: இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு அறிவித்த திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்புவெளியாகி 2 ஆண்டுகளான நிலையில், நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. மதுரை கூட்டுக் குடிநீர் திட்டப் பணி மெத்தனமாக நடந்து வருகிறது. பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைகின்றனர். கட்சி மாறுவது ஜனநாயக உரிமை. அதேபோல, போகிறவர்களையும் தடுக்க முடியாது. விருதுநகரில் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட ஜவுளிப் பூங்கா திட்டத்துக்கு திமுக அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது. திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் இருக்கின்றனர். அது கட்சி அல்ல, கம்பெனி. திமுக வாரிசு அரசியல் செய்கிறது. ஒரு குடும்பத்துக்குள் கட்சி போகக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. அதிமுகவில் சாதாரண தொண்டன்கூட, என்னைப் போன்று உயர்ந்த பொறுப்புக்கு வரமுடியும். மக்களவைத் தேர்தல் அறிவித்தபின்புதான் கூட்டணி குறித்து முடிவாகும். மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்திதான் வாக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. 2014-ல் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி ஜெயலலிதா வாக்கு கேட்கவில்லை. வேறு கட்சியிலிருந்து வந்தவர் சேலம் ஏ.வி.ராஜு. கட்சியின் கட்டுப்பாடு, விதிகளை மீறியதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் கூறுவதை எல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது. பதவி இல்லாத விரக்தியில் அவர் பேசுகிறார். சசிகலா, ஓபிஎஸ் காரில் அதிமுக கொடி கட்டிப் பயணிப்பதாக ஆதாரப்பூர்வ தகவல் இல்லை. அப்படியிருந்தால், அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். திமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கின்றன என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இரட்டை இலைச் சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின்பு அவரது (ஓபிஎஸ்) ஆசைநிறைவேறாது. அது நிராசையாகவே முடியும். மேகேதாட்டு அணை விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக அரசு.அந்தப் பிரச்சினையில் எங்கு, எதைப் பேச வேண்டுமோ, அதைப் பேச திமுக தவறிவிட்டது. விலைவாசி உயர்வு, சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, சட்டம்,ஒழுங்கு பிரச்சினையால் திமுகஅரசின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த ஆட்சி தொடர்ந்தால், ஆண்டவனாலும்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.
மக்களின் மனஓட்டம் தெரியும்; கூட்டணிக்காக அலைபாயவில்லை: செல்லூர் ராஜு கருத்து
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 06:00:00
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று நடைபெற்றது. அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜு விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது: வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம் உட்பட பல நிவாரண உதவிகளை செய்து விவசாயிகளை கைதூக்கி விட்டது அதிமுக அரசு. இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் 1 கோடியே 6 லட்சத்து 98,482 விவசாயிகளுக்கு ரூ.60,646 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்: 2011 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகாலத்தில் சராசரியாக ரூ.6 ஆயிரம் கோடிதான் பயிர்க்கடன் கொடுத்துள்ளீர்கள். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்குகிறது. கடந்த ஆண்டு ரூ.12,600 கோடி, இந்த ஆண்டு ரூ.16,500 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்லூர் கே.ராஜு: சென்னைக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்தீர்கள். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும் ஒதுக்க வேண்டும். எங்களுக்கு கூட்டணி மீது இருக்கும் நம்பிக்கையைவிட, எங்கள் தொண்டர்கள் மேல் இருக்கும் நம்பிக்கைதான் அதிகம். பேரவை தலைவர் மு.அப்பாவு: கூட்டணி இல்லை என்று முடிவு செய்துவிட்டீர்கள். நன்றி. செல்லூர் கே.ராஜு: நாங்கள் கூட்டணிக்காக அலைபாய்வதே இல்லை. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்களின் மனஓட்டம் எங்கள் பொதுச்செயலாளருக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு விவாதம் நடை பெற்றது.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கம் உட்பட 12 சட்ட முன்வடிவுகள் அறிமுகம் @ தமிழக சட்டப்பேரவை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 05:41:00
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, நேற்று 12 சட்டமுன்வடிவுகள் பல்வேறு துறை அமைச்சர்களால் அறிமுகம் செய்யப்பட்டன. ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் மலக்கசடு, கழிவுநீரைப் பாதுகாப்பாக அகற்றஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம்செய்தார். அதில், மலக்கசடுகள், கழிவுநீரை சேகரித்துக் கொண்டு செல்லுதல், அகற்றுவதற்கான நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிவு செய்வது, கழிவுநீர் சிந்தினால்அதை வாகன உரிமையாளர், பொறுப்பாளரே அகற்றும் வகையிலான சரத்துகள் இடம்பெற்றுள்ளன. மீறினால், அபராதம் விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஊரக உள்ளாட்சிகளில் திடக்கழிவுகளை திறம்பட சேகரிப்பதற்கும் அறிவியல் சார்ந்த முறையில் அதை அகற்றுவதற்கும் ஊராட்சியில் மீது ஒரு கடமையை ஏற்படுத்துவதற்கான சட்டத்திருத்த முன்வடிவையும் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார். கடந்த 2001-ம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டத்தில், மாநில நெடுஞ்சாலைகள் அமைப்பு, நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்பு ஆகியவற்றுக்கு பதில்மாநில தலைமை நிர்வாகி, நிர்வாகிகள் என மாற்றுவதற்கான சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகம் செய்தார். கடந்தாண்டு ஏப்.1-ம் தேதி, சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமுன்வடிவையும் அவர் அறிமுகம் செய்தார். நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்த உடனடி, நீ்ண்டகால திட்டம் தயாரித்தல், பன்னாட்டு நிதியைக் கொண்டுவருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது இந்த ஆணையத்தின் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து, வணிகம்சாரா நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல்செய்வது தொடர்பாக ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்திருத்த முன்வடிவு, மாநிலத்தின் எதிர்பாராத செலவுகளுக்காக, அதற்கான நிதியத்தின் உள்ளடக்கத் தொகையை ரூ.150 கோடியில் இருந்து ரூ.500 கோடியாக உயர்த்தும் வகையில் எதிர்பாரா செலவுநிதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வடிவு, வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மாநில உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதம்வரை குறைக்கும் வகையில், நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு என 3 சட்டத்திருத்த முன்வடிவுகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து, சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா)சட்டத்திருத்த முன்வடிவை வீட்டுவசதி அமைச்சர் சு.முத்துசாமி அறிமுகம் செய்தார். இந்த சட்டத்திருத்தம், சென்னையில் நிலவும் போக்குவரத்து சிக்கல்களை தீர்க்கவும், கும்டா அதிகார அமைப்பைமாற்றியமைக்கவும், அதிகார அமைப்பின் பங்கை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. இந்த அதிகார அமைப்பின் தலைவராக முதல்வர் செயல்படுவார். இதையடுத்து, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டதன் அடிப்படையில், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா,மனோன்மணீயம், பெரியார், திருவள்ளுவர், தமிழ்நாடு திறந்தநிலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் ஓய்வு வயதை 58-ல் இருந்து60 ஆக உயர்த்தும் வகையில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் சட்டங்களை திருத்துவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிமுகம் செய்தார். மேலும், கடந்த 1914-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு மருத்துவ பதிவுச்சட்டத்தை புதுப்பிக்கவும், தேர்தல் நடவடிக்கைகளில் சீர்திருத்தம் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து. தமிழ்நாடு மருத்துவ பதிவுச்சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு மாநில மருத்துவ மன்றத்தை உருவாக்குவதற்கான சட்டமுன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். இந்தசட்ட முன்வடிவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித் தார். அதைத்தொடர்ந்து, அறநிலையத் துறை கோயில்களுக்கான அறங்காவலர்களாக தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களையும் நியமிக்கும் வகையிலான சட்டத்திருத் தத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிமுகம் செய்தார். தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் தயாரித்தல், ஒப்புதல்செய்தல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிமுகம் செய்தார். இந்த 12 சட்ட முன்வடிவுகளும் இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் வலியுறுத்தி வாங்கித்தர வேண்டும்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 05:35:00
சென்னை: மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலையும், மத்திய அரசின் பங்களிப்பு நிதியையும் பெற்று தர வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன்’’ என்றார். இதுதொடர்பாக நேற்று நடந்த விவாதம்: அமைச்சர் தங்கம் தென்னரசு: கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு தமிழகத்துக்கு மட்டும் தாமதம் செய்கிறது. நிதியும் தருவதில்லை. ரூ.69,000 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளில் மாநில அரசு முழுவதும் சொந்த நிதியில் இருந்து செலவிட்டு வருகிறது. இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசின் ஒப்புதலையும், நிதியும் பெற்றுத் தரவேண்டும். பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: சென்னை, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்கினால் நிச்சயம் உதவி செய்ய தயாராக உள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக எவ்வித அரசியலும் பார்க்காமல் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகவே இருக்கிறாம். அமைச்சர் தங்கம் தென்னரசு: இணைந்து பணியாற்ற எங்களை அழைத்தற்குப் பதிலாக உங்கள் முன்னாள் நண்பர்களை (அதிமுக) அழைத்திருந்தால் அவர்கள் முன்வந்து இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: 57.83 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 05:30:00
சென்னை: தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதில்5 வயதுக்குட்பட்ட 57.83 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி (ஞாயிறு) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 5 வயதுக்குட்பட்ட சுமார் 57.83 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் சொட்டு மருந்துவழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயில்களில் தனி உண்டியல் வைத்து வசூல்: போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-22 05:26:00
மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றமதுரை கிளையில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் வரதராஜ பெருமாள்கோயில், புஷ்பநாதசுவாமி கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், மகாபல்லேஸ்வரர் கோயில், வழங்கியம்மன் வாஞ்சி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில் ஆகியவற்றுக்குச் சொந்தமாக பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த கோயில்களின் சொத்துகளை தனியார் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். மேலும், கோயில்களில் பராமரிப்புக்குப் போதுமானநிதியில்லை என்று கூறி,கோயிலின் உள்ளே தனியாகஉண்டியல் வைத்தும், ஜிபே வழியாகவும் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. எனவே, கரூர் மாவட்ட கோயில்களுக்குச் சொந்தமானசொத்துகளை மீட்டுப் பராமரிக்கவும், கோயில்களில் உண்டியல்வைத்து வசூல் செய்யும் வெளிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பி.புகழேந்திமுன்னிலையில் விசாரணைக்குவந்தது. அறநிலையத் துறை வழக்கறிஞர் வாதிடும்போது, "கோயில்களில் அன்னதானம் வழங்க தேவையான நிதியை சேகரிக்க உண்டியல் வைக்கப்பட்டது. புகார் வந்ததையடுத்து, உண்டியல்கள் அகற்றப்பட்டன. உண்டியல் வைத்த நபர்களைகண்டறிய சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டபோது, சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். இதையடுத்து நீதிபதி," ஒரு கோயிலுக்குள் வந்து உண்டியல் வைத்த நபரைக் கண்டுபிடிக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது திட்டமிட்ட செயல். எனவே, இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். மேலும், போலீஸாரும் விசாரித்து, உண்டியல் வைத்த நபர்களைக் கண்டுபிடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோயில் சொத்துகள் மீட்பு மற்றும் பராமரிப்பு குறித்து அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப். 23-க்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
நடப்பு நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்காக ரூ.30,355 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடுகள்: பேரவையில் நிதி அமைச்சர் தாக்கல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 05:22:00
சென்னை: சட்டப்பேரவையில், 2023-24 நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றுதாக்கல் செய்து பேசியதாவது: பேரவையில் வைக்கப்பட் டுள்ள இறுதிதுணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.30,355.32 கோடி நிதிஒதுக்கத்துக்கு வகை செய்கின்றன. இதில், ரூ.26,590.09 கோடி வருவாய்கணக்கிலும், ரூ.3,499.98 கோடி மூலதன கணக்கிலும், ரூ.265.25 கோடி கடன் கணக்கிலும் அடங்கும். சட்டப்பேரவையில் 2023-24-ம்ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் கடந்த 2023 அக்டோபர் 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புதிய பணிகள், புதிய துணை பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட செலவினங்களுக்கு பேரவையின் ஒப்புதலை பெறுவது இந்த துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கம். குறிப்பாக, எரிசக்தி துறை மானிய கோரிக்கையின்கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்துக்கு இழப்பீட்டு நிதியாகரூ.15,593.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு மானிய கோரிக்கையின்கீழ், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு ரொக்க நிவாரண உதவியாக ரூ.1,486.93 கோடி வழங்கப்பட்டுள்ளது. எதிர்பாராத தொடர் மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கால் தென் மாவட்டங்களான நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரொக்கநிவாரண உதவியாக ரூ.541.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறப்புதிட்ட செயலாக்க துறையின்கீழ்கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்துக்கு கூடுதல் நிதியாக ரூ.1,055.34 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இறுதி துணை மதிப்பீடுகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கோரிய நிதி ஒதுக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்டது.
வார இறுதி, திருவண்ணாமலை கிரிவலத்தையொட்டி பிப்.23, 24-ம் தேதிகளில் 1,730 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 05:20:00
சென்னை: திருவண்ணாமலை கிரிவலம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 23, 24-ம்தேதிகளில் 1,730 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 24-ம் தேதி பவுர்ணமி (சனிக்கிழமை), 25-ம் தேதி (ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23, 24-ம் தேதிகளில் 1,370 பேருந்துகள், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 160 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 1,730 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 25-ம் தேதி ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 30 ஏசி பேருந்து: வரும் 24-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 23, 24-ம் தேதிகளில் இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள 30 ஏசி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம், tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க,குறிப்பிட்ட பேருந்து நிலையங்க ளில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: காவல் ஆணையரிடம் ஜீயர் புகார்
செய்திப்பிரிவு
திருச்சி
2024-02-22 05:19:00
திருச்சி: ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக, அந்த மடத்தின் ஜீயர்காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஸ்ரீபலஹாரி புருஷோத்தம ஜீயர் மடம் உள்ளது. இந்த மடத்தின் 6-வது ஜீயர் பராங்குச புருசோத்தம ராமானுஜ ஜீயர்(42), வழக்கறிஞர் ஸ்ரீராமுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினியிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பலஹாரி புருஷோத்தம ஜீயர் மடத்துக்கு ரூ.500 கோடிக்கும் மேல் அசையா சொத்துகள் உள்ளன. உள்ளூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களின் தொல்லை தாங்க முடியாமல், இதற்கு முன்பு ஜீயராக இருந்தவர் 2010-ல் தலைமறைவாகிவிட்டார். 2022-ல் மடத்தின் 6-வது ஜீயராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது மடத்தின் வரவு-செலவு கணக்குகளை சரி பார்த்தபோது, மடத்துக்குச் சொந்தமான சில இடங்களை 3-வது நபர்கள் மூலம் அபகரித்தது தெரியவந்தது. மேலும், மடத்துக்குச் சொந்தமான சொத்துகளை முழுமையாககைப்பற்றும் நோக்கில் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் ஒருவர், என்னை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். அவரது மோசடிகளுக்கு, ஏற்கெனவே மடத்தில் பணிபுரிந்து வந்த ஒருவர் உள்ளிட்ட 7 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கு போகமாட்டோம்: வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு
செய்திப்பிரிவு
ராமேசுவரம்
2024-02-22 05:16:00
ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இந்திய பக்தர்கள் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா வரும் 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை, இந்திய பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இதற்காக இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் வேர்க்கோடு பங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தலைமையில் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 75 விசைப்படகு, 28 நாட்டுப் படகுகளில் 3,455 பயணிகள் திருவிழாவில் பங்கேற்கப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்து. இந்த தீர்ப்பை ரத்து செய்து, மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று 5-வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாகவும், பயணத்துக்கான விசைப் படகுகளையும் வழங்க மாட்டோம் என்றும் அறிவித்தனர். திருப்பயணம் ரத்து: இது தொடர்பாக வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய பங்குத்தந்தை சந்தியாகு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராமேசுவரம்மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல முடியாது. எனவே, ராமேசுவரத்திலிருந்து செல்லவிருந்த திருப்பயணம் ரத்து செய்யப்படுகிறது. கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து பதிவு செய்திருந்த பயணிகள், ராமேசுவரம் வர வேண்டாம். பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட பயணத் தொகையை, வசூலித்தவர்கள் மூலமாகவே திருப்பிக் கொடுக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ரூ.2,080 கோடியில் பள்ளி கட்டிடங்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 05:11:00
சென்னை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடுஏற்படாத வகையில் புதிதாகவளைவு திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் இதுவரை ரூ.2,080கோடிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்தனர். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் விவரம்: எழிலன் (திமுக): நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் உள்ளிட்டோரை நியமிப்பதால், அவர்கள் நிரந்தரமாக பணியில் இருப்பதில்லை. சுகாதாரத் துறைபோல மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகத் துறைக்கு தனியாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். சுகாதாரத் துறைபோல, பணி நீட்டிப்பு முறையில் மருத்துவர்கள் தொடர்ந்து பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.வேல்முருகன் (தவாக): சென்னையில் நான் வசிக்கும் பகுதியில் மாதம் 2 லாரி தண்ணீர் வாங்குகிறேன். எங்கள் பகுதியில் தண்ணீர்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் நேரு: சென்னையில் குடிநீர் பிரச்சினை இல்லை. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, தேர்வாய்க்கண்டிகை, வீராணம் திட்டங்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டும் தினசரி 250 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. அங்குதேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடத்தில் குழாய் பதிக்கும் பணிகள் 8 ஆண்டுகளாக முடிக்கப்படவில்லை. இன்னும் 7 மாதங்களில் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். பணி முடிந்துவிட்டால் செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டும் தினசரி 500 மில்லியன் லிட்டர் நீர் வழங்க முடியும். இதுதவிர, புதிதாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் வரும் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் சென்னை மாநகருக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்க தற்போது உள்ள 5-6 திட்டங்களை இணைத்து புதிதாக வளைவு திட்டம் அமைக்க முடிவு எடுத்துள்ளோம். இதன்மூலம், ஒரு திட்டத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டாலும், மற்றொரு திட்டம் மூலம் தண்ணீர் வழங்க முடியும். தி.சதன் திருமலைக்குமார் (மதிமுக): பள்ளிக் கட்டிட கட்டுமான பணிகள் எந்த அளவில் உள்ளன? அமைச்சர் அன்பில் மகேஸ்: பேராசிரியர் அன்பழகன் பள்ளிமேம்பாட்டு திட்டத்தில் ரூ.7,500 கோடி ஒதுக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் கழிவறைகள் உட்பட 18ஆயிரம் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை 3,601 வகுப்பறைகள், 21 ஆய்வகங்கள், 154 யூனிட் கழிப்பறைகள், 700 மீட்டர் நீளத்துக்கு சுற்றுச்சுவர், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட 5 நூலகங்கள் என மொத்தம் ரூ.2,080 கோடிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 3,600 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 191 கழிப்பறைகள், 2.1 கி.மீ. நீளத்துக்கு சுற்றுச்சுவர், தலா 5 மாணவர், மாணவியர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பழமையான கட்டிடங்களை பொருத்தவரை, 100 ஆண்டுகள் கடந்த 5 பள்ளி கட்டிடங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதேபோல, இந்த முறையும் 5 பள்ளிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர்கள் பதில் அளித்தனர். தாய்மொழி தின உறுதிமொழி: உலக தாய்மொழி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பேரவையில் கேள்விநேரம் முடிந்ததும், தாய்மொழிதினம் தொடர்பான உறுதிமொழியை பேரவைத் தலைவர்அப்பாவு வாசித்தார். ‘‘எங்கும் தமிழ்எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்றநடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைப்போம். அனைத்துஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழில் பெயர்சூட்ட பரப்புரை செய்வோம். இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 05:10:00
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 25-ம்தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாளை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 24, 25-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 26, 27-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 73 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி ஏற்பட களம் அமைப்போம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 05:07:00
சென்னை: தமிழகத்தில் அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டு காமராஜர் ஆட்சி ஏற்பட களம் அமைப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள் ளார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில்நேற்று நடைபெற்றது. இதையொட்டி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனை அடைந்தசெல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய்குமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள தலைவர்கள் அவரை வாழ்த்திப் பேசினார். கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான். கடந்த 70 ஆண்டுகளாக அவர்களிடம் நிறைய வாக்குகளை பெற்றிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் குறைவாகவே செய்துஇருக்கிறோம். இன்று செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவரை நான் மனமார வரவேற்கிறேன், வாழ்த்து கிறேன். நான் திருநாவுக்கரசரிட மிருந்து தலைவர் பதவியை பெற்றபோது மகிழ்ந்தேன். அதே மகிழ்ச்சியோடு இந்த பதவியை செல்வப்பெருந்தகைக்கு வழங்கு கிறேன்’’ என்றார். மேலிட பார்வையாளர் அஜோய் குமார் பேசும்போது, ‘‘பாஜக நாட்டை சீரழித்து வருகிறது. இந்தத் தேர்தலை சுதந்திரப் போராக கருதி, அனைவரும் செயலாற்ற வேண்டும். செல்வப்பெருந்தகை தலைமையில் 39 தொகுதிகளிலும் அதிமுக, பாஜகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்’’ என்றார். அதைத் தொடர்ந்து செல்வப் பெருந்தகை பேசியதாவது: இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. நாட்டை காப்பாற்ற ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். மல்லிகார்ஜூன கார்கேநம்பிக்கையோடு இந்த பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கிறார். இந்தநாட்டை காக்க முடியும் என்றால்அது காங்கிரசால் மட்டுமே முடியும்.அழகிரியின் பணி பாராட்டுக்குரி யது. அவர் எல்லோரையும் அரவணைத்துச் சென்றார். 18 எம்எல்ஏக்கள், 8 எம்பிக்களை பெற்றுத்தந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்க மாட்டார்கள். அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டால் காமராஜர் ஆட்சி கொண்டுவர முடியும். அதற்கு எல்லோரும் சேர்ந்து களம் அமைப்போம். இன்று இல்லை என்றாலும்ஒருநாள் நடந்தே தீரும். அதற்கான திட்டங்களை நாம் முன் னெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட தலைவர் சிவ.ராஜ சேகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் சிரிவெல்லபிரசாத், பெ.விஸ்வநாதன், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர்அல்போன்ஸ், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், கட்சியின் மாநில பொருளாளரர் ரூபி மனோகர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, விஜய் வசந்த், மாவட்டதலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், அடையார் துரை, ரஞ்சன் குமார், முத்தழகன், டில்லி பாபு, அசன் மவுலானா எம்எல்ஏ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மகளிர் அணி தலைவி சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வேலைவாய்ப்பு, அரசியலில் பங்களிப்பை ஊக்கப்படுத்த தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 05:04:00
சென்னை: தமிழகத்தில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசியலில் பெண்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையுடன், சமூக நீதி,சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம்அளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் மாநில மகளிர் கொள்கை-2024 உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலன், மகளிர்உரிமை துறையால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையைமுதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், துறை ஆணையர் வே.அமுதவல்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாலின உணர்திறன் கொண்ட கல்விமுறையை நிறுவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், வளர்இளம் பெண்கள், மகளிரின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பில் மகளிர் பங்களிப்பைஅதிகரித்தல், பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான, உகந்த பணியிடங்களை உறுதிசெய்தல், பெண்கள் நிர்வகிக்கும்சிறு தொழில்கள், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தல், அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெற டிஜிட்டல் கல்வி அறிவை ஊக்குவித்து, டிஜிட்டல் பாலின இடைவெளியை குறைத்தல், பயிற்சி, திறன் மேம்பாடு மூலம் திறன் இடைவெளியை குறைத்தல், மகளிருக்கு வங்கி கடன் உதவி அதிகம் கிடைக்க வழிவகை செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல் ஆகியவை மாநில மகளிர் கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும். சமூகநலத் துறை ஒருங்கிணைப்பு துறையாக இருந்து இக்கொள்கையின் செயல்பாட்டை கண்காணிக்கும். இதற்காக, சமூகநலத் துறை இயக்குநரக அலுவலகத்தில் ‘செயல்படுத்தல், கண்காணிப்பு அலகு’ அமைக்கப்படும். தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலை பெண்கள் உரிமை குழு, சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, கொள்கை செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்கும். இதேபோல, ஆட்சியர்கள் தலைமையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை இதன் செயலாக்கத்தை கண்காணித்து, எதிர்கொள்ளும் சவால்களை சரிசெய்யும். சமூகம், பொருளாதாரம், அரசியலில் அதிகார பகிர்வு பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் பெண்களின் நிலையை இக்கொள்கை மேம்படுத்தும். பெண்கள் சுயமரியாதையுடன் வாழவும், அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம்நிறைந்த சூழலை உருவாக்கவும் இது ஏதுவாக இருக்கும். நாட்டில் மகளிர் மேம்பாட்டுக்காக தனியான ஒரு கொள்கையை ஒருசிலமாநிலங்களே இதுவரை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை சந்திப்பில் பிப்.28 வரை ஏராளமான ரயில்கள் ரத்து
செய்திப்பிரிவு
திருநெல்வேலி
2024-02-22 04:20:00
திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு - மேலப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேறு சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் வருமாறு: தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி - தூத்துக்குடி, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் பிப்ரவரி 28-ம் தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. வாஞ்சி மணியாச்சியில் இருந்து காலை 11.05 மணிக்கு திருச்செந்தூர் புறப்படும் பயணிகள் ரயில், திருச்செந்தூரில் இருந்து மதியம் 2.10 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு புறப்படும் பயணிகள் ரயில் ஆகியவை வரும் 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு காலை 10 மணி, மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில்கள், திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரயில்கள் வரும் 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப் படுகின்றன. நாகர்கோவில் - திருநெல்வேலி இடையேயான பயணிகள் ரயில் வரும் 28-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் 26-ம் தேதி இரவு 7.45 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலியில் இருந்து வரும் 25-ம் தேதி இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து வரும் 26-ம் தேதி காலை 8.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில், நாகர்கோவிலில் இருந்து வரும் 25-ம் தேதி மாலை 4.35 மணிக்கு தாம்பரத்துக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. பகுதி ரத்தாகும் ரயில்கள்: திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு பாலக்காடுக்கு புறப்படும் விரைவு ரயில் வரும் 28-ம் தேதி வரை, திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதியம் 2 மணிக்கு வாஞ்சி மணியாச்சியில் இருந்து பாலக்காடுக்கு புறப்படும். மறுமார்க்கத்திலும் இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்படும். திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இடையேயான இண்டர் சிட்டி ரயில் பிப்ரவரி 22, 23 மற்றும் 24-ம் தேதிகளில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதே ரயில் வரும் 25, 26, 27 மற்றும் 28-ம் தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும், கோவில்பட்டி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மற்றும் மதியம் 2.35 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் பயணிகள் ரயில் வரும் 28-ம் தேதி வரை சேரன்மகாதேவி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் முறையே காலை 10.03 மணி மற்றும் மாலை 6.34 மணிக்கு சேரன்மகாதேவியில் இருந்தே செங்கோட்டைக்கு புறப்பட்டுச் செல்லும். தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் 22, 23, 24, 25, 26 மற்றும் 27-ம் தேதிகளில் விருதுநகர் வரையே இயக்கப்படும். விருதுநகர் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் விருதுநகரில் இருந்தே மாலை 6.46 மணிக்கு தாம்பரத்துக்கு புறப்பட்டுச் செல்லும். நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு கோயம்புத்தூருக்கு புறப்படும் விரைவு ரயில், 23, 24, 25, 26, 27 மற்றும் 28-ம் தேதிகளில் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் செல்லும். இதுபோல், கோயம்புத்தூரில் இருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும் விரைவு ரயிலும் 23, 24, 25, 26, 27 மற்றும் 28-ம் தேதிகளில் திண்டுக்கல் வரையே இயக்கப்படும். இவ்விரு ரயில்களும் திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து மாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் விரைவு ரயில் 22, 23, 24, 25, 26, 27 ஆகிய நாட்களில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.15 மணிக்கு பெங்களூரு புறப்படும் விரைவு ரயிலும், நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 1 மணிக்கு பெங்களூருவுக்கு புறப்பட்டுச் செல்லும். ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் பயணிகள் ரயில் 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். இதுபோல் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வரை செல்லும் ரயிலும் செங்கோட்டை - வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்பட்டு, இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்பட்டுச் செல்லும். பாலக்காடு - திருநெல்வேலி இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் கொல்லம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் கொல்லம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு பாலக்காடு புறப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் 23, 24, 25, 26, 27 மற்றும் 28-ம் தேதிகளில் திருநெல்வேலி - கொல்லம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கொல்லத்தில் இருந்து அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும். மும்பை தாதரில் 22-ம் தேதி இரவு 8.40 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மதுரையுடன் நிறுத்தப்படும். கச்சிகுடா - நாகர்கோவில் வாராந்திர ரயில் வரும் 23-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படும். 25-ம் தேதி காலை 8 மணிக்கு திருச்சியில் இருந்தே கச்சிகுடாவுக்கு புறப்பட்டுச் செல்லும். திருநெல்வேலியில் இருந்து வரும் 25-ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு பிலாஸ்பூர் புறப்படும் அதிவிரைவு ரயில், திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்று அதிகாலை 4.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும். ஜாம்நகர் - திருநெல்வேலி விரைவு ரயில் 23, 24-ம் தேதிகளில் திருவனந்தபுரத்திலேயே நிறுத்தப்படும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் 26, 27-ம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு ஜாம்நகர் செல்லும். மும்பை தாதரில் இருந்து 24-ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலி புறப்படும் விரைவு ரயில் விருதுநகரில் நிறுத்தப்படும். இந்த ரயில் மறு மார்க்கத்தில் 26-ம் தேதி மதியம் 4,55 மணிக்கு விருதுநகரில் இருந்து தாதருக்கு புறப்பட்டுச் செல்லும். திருநெல்வேலியில் இருந்து 26-ம் தேதி மாலை 5.35 மணிக்கு புறப்படும்  மாதா வைஷ்ணவதேவி கத்ரா விரைவு ரயில் திருநெல்வேலி - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்று இரவு 11.10 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டுச் செல்லும். புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 25-ம் தேதி பகல் 12.05 மணிக்கு புறப்படும் ரயில் விருதுநகரில் நிறுத்தப்படும், இந்த ரயில் மறுமார்க்கத்தில் 26-ம் தேதி மாலை 5.15 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டுச் செல்லும். திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதருக்கு வரும் 28-ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்படும் அதி விரைவு ரயில், திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்று இரவு 9.50 மணிக்கு மதுரையில் இருந்து தாதர் புறப்பட்டுச் செல்லும்.
பிரதமர் மோடி பொதுக் கூட்டம்: திருப்பூரில் பாஜகவினர் நூதன பிரச்சாரம்
செய்திப்பிரிவு
திருப்பூர்
2024-02-22 04:12:00
திருப்பூர்: பல்லடம் அருகே மாதப்பூரில் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக் கூட்டத்துக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பாஜகவினர், நூதனமாக ரோபோ மூலம் அழைப்பு துண்டறிக்கைகளை விநியோகம் செய்தனர். மக்களவைத் தேர்தல் பிரச்சார பணிகளை பாஜக தொடங்கி உள்ள நிலையில், வரும் 27-ம் தேதி பல்லடம் அருகே மாதப்பூரில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயண நிறைவு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இது தொடர்பாக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ரோபோ மூலம் பாஜகவினர் அழைப்பு துண்டறிக்கைகளை பொது மக்களுக்கு வழங்கினர். மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட தலைவர் செந்தில் வேல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை ரோபோ மூலம் வழங்கினர். அப்போது பாஜக சின்னமான தாமரை புகைப்படங்களை வழங்கினர். பல்லடம் பகுதியில் பொது மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பங்கேற்கும் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை, கட்சியின் தலைவரான அண்ணாமலையின் முகமூடி அணிந்து கட்சியினர் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ் பாண்டி, நகர பொதுச் செயலாளர்கள் ரமேஷ் குமார், பன்னீர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
”தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறையை கட்டுப்படுத்த கூடுதல் கட்டமைப்பு தேவை”
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 04:06:00
சென்னை: தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் தலையீடு செய்வதற்கு கூடுதல் அமைப்புகளை கட்டமைக்க வேண்டும் என்று தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், மாநிலக் குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலத் தலைவருமான இரா.நல்லகண்ணு தலைமை வகித்தார். கூட்டத்தில், கே.சுப்ரமணியன் எழுதிய‘பில்கீஸ் பானு’ ( நீதியைத் தேடி நீண்ட பயணம் ) என்ற நூல் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்து, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசிய தாவது: தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் எனத் தொடங்கி இருந்தாலும், தலித் உரிமைகள் இயக்கத்துடனே இருக்கிறோம். தலித்உரிமைகள் இயக்கம் என்பது தலித் மக்கள் மீதான அடக்குமுறையை எதிர்ப்பதில், தலித் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதில், அரசியல் பகிர்வில் அடங்கியுள்ளது. அரசியல் அதிகாரம் இல்லாமல் வெறும் அடக்கமுறையை எதிர்ப்பது நோக்கம் அல்ல. அனுசரிப்பு கலாச்சாரம்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். இது தான் நமது நோக்கம்.தலித் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருக்கிறது. இவற்றில் தலையீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. எனவே, தலித் மக்கள் மீதான அடக்கு முறையில் தலையீடுகள் செய்வதற்கு கூடுதல் அமைப்புகளை கட்டமைக்க வேண்டும். எங்கு அமைப்புகள் வலுவாக இருக்கிறதோ அங்கு தலையீடுகள் செய்யலாம். எனவே, அமைப்புகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஒரு மதம், பிற மதத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை. அதேநேரம் பிற மதத்தை மதிக்க வேண்டும். இந்த அனுசரிப்பு கலாச்சாரம் தான் பன் முகத்தின் ஆழம். இது, மதச்சார்பின்மையின் ஆழமாகும். இதை அடித்து நொறுக்குவதற்கு பாஜக முயல்கிறது. இதுதான் பேராபத்து. இவ்வாறு அவர் பேசினார். அகில இந்திய தலித் உரிமைகள் இயக்க தலைவர் ராம மூர்த்தி, அகில இந்திய தலித் உரிமைகள் இயக்க தேசிய குழு உறுப்பினர் உதய குமார் உள்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் தலித் மக்கள், மலை வாழ் மக்கள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதை தடுக்கத் தவறிய மத்திய பாஜக அரசை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட சென்னை தொகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் அரசு: பாஜக
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 04:04:00
சென்னை: பாஜக வட சென்னை மக்களவைத் தொகுதி இணை பொறுப்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட உள்ள, ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்களின் விவரங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த நிதிநிலை அறிக்கையிலும் இதே ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதற்கான தடயங்களே இல்லை. இன்று தேர்தலில், திமுகவின் வாக்கு வங்கிக்காக ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் என்று பழைய பல்லவியை புது மெட்டில் பாடி இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட அரசுகள், வட சென்னை பகுதியை புறக்கணித்தே வந்துள்ளன. தென்சென்னையையும், வட சென்னையையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாலே வட சென்னையை எந்தஅளவுக்கு 'மாற்றாந்தாய்' மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தியிருக்கிறது என்பது தெரிய வரும். வட சென்னையில் பல்வேறுகட்டமைப்புகள் அரைகுறையாகவே உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் மயானங்களின் பராமரிப்புகூட படுமோசமாக உள்ளன. மக்களை ஏமாற்ற மீண்டும் மீண்டும் வட சென்னை வளர்ச்சி திட்டம் என்று ஏற்கெனவே அறிவித்த திட்டத்தை நிதியை மீண்டும் தேர்தலுக்காக அதே அறிவிப்பை செய்துள்ளனர். இப்படி மக்களை ஏமாற்ற நினைக்காமல், வட சென்னையின் வளர்ச்சிக்கு, அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பூந்தமல்லி - பரந்தூர், ஆவடி - கோயம்பேடு வரை நீட்டிப்பு: விரிவான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க அரசு அனுமதி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-22 04:02:00
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்துார் வரையும், ஆவடி – கோயம்பேடு வரையும் நீட்டிப்புக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித் தடத்தை கிளாம்பாக்கம் வரை 26 கி.மீ. தொலைவுக்கு ( வழி:கேளம்பாக்கம் ) நீட்டிக்கவும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கவும், மாதவரத்தில் இருந்து கோயம் பேடு வழியாக சோழிங்க நல்லூர் வரையிலான 5-வது வழித் தடத்தை கோயம் பேட்டில் இருந்துஆவடி வரை 17 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கவும் சாத்திய கூறு அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்றன. முதல்கட்டமாக, சிறுசேரி – கிளாம்பாக்கம், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு குறித்து சாத்திய கூறு அறிக்கை தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறையிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் சமர்ப்பித்தது. தொடர்ந்து, கலங்கரை விளக்கம் –பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் வழித் தடத்தை பரந்தூர் வரை நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக் கூறு அறிக்கை கடந்த மாதம் 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு,ஆவடி – கோயம்பேடு, பூந்தமல்லி – பரந்துார் மெட்ரோ திட்டத்துக்குஒப்புதல் அளித்து, அடுத்தகட்டமாக, விரிவான திட்ட அறிக்கையைதயாரிக்க அனுமதி அளித்துள்ளது. கோயம்பேடு – ஆவடி நீட்டிப்பு திட்டத்தில் பாடி புதூர் நகர், பார்க்ரோடு, கோல்டன் பிளாட், அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் உட்பட 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. பூந்தமல்லி – பரந்தூர் நீட்டிப்புதிட்டத்தில் நசரத் பேட்டை, செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் உட்பட 14 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி – பரந்துார், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிடப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில் தடத்தில் தற்போதைய நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதுார் வரையில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும். பரந்துார் விமான நிலையம் அமையும் போது, மேலும், இந்த தடத்தில் கூட்டம் அதிகரிக்கும். இதேபோல, அதிக நெரிசல்மிக்க வழித் தடமாக இருக்கும் கோயம்பேடு – ஆவடிக்கு மெட்ரோரயில் திட்டத்துக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த திட்ட அறிக்கை அடுத்த 4 முதல் 6 மாதங்களில் தமிழக அரசிடம் அளிக்க உள்ளோம். விரிவான திட்ட அறிக்கையில், மேம்பால பாதை, சுரங்கப் பாதை வழித் தடங்கள், ரயில் நிலையங்கள், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
‘தமிழகத்தின் அரசியல் களத்தை மாற்றுவோம்’ - அண்ணாமலை உறுதி @ அரவக்குறிச்சி
ஜி.ராதாகிருஷ்ணன்
கரூர்
2024-02-21 23:42:00
கரூர்: தமிழகத்தின் அரசியல் களத்தை மாற்றுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சின்னதாராபுரத்தில் ‘என் மண் என் மக்கள் நடைபயணம்’ மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். இதில் அண்ணாமலை பேசியதாவது.. “தமிழக மக்கள் அரசியலில் நேர்மையை எதிர்பார்க்கின்றனர். நடைபயணத்தில் திமுகவின் 33 மாத ஆட்சியை தோலுரித்து காட்டுகின்றோம். மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை கூறுகின்றோம். 2024-ம் ஆண்டு தேர்தலில் 3-வது முறையாக மோடி பிரதமராக உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. அவர் 3-வது முறை பிரதமராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாத. 400 எம்பிக்களுக்கு மேல் பெற வேண்டும். அதற்கு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். பாஜக தெளிந்த நீரோடை. நேர்மை நம் பக்கம். அரசியலில் நேர்மை, நாணயம், நல்ல மனம், சேவை செய்யும் எண்ணம் ஆகியவற்றை கொண்டுள்ளோம். தமிழகத்தின் அரசியல் களத்தை மாற்றுவோம். ஊழல், குடும்ப ஆட்சி, தனிமனித துதி பாடுதல் ஆகியவற்றை மாற்றுவோம். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 250 நாளுக்கு மேல் சிறையில் உள்ளார். அவர் தம்பி தலைமறைவாக உள்ளார். குடும்ப வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு ஊழல் ஆட்சி செய்கின்றனர். ஆனால், பாஜக தொலைநோக்கு பார்வையோடு செயல்படுகிறது. சாமானியனும் மக்கள் பணியாற்ற முடியும் என காட்டியுள்ளது. பாஜக நிச்சயமாக கள்ளுக்கடைகளை திறக்கும். திமுக அரசு டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் என அவர்களது மதுபான நிறுவன தயாரிப்புகளை கொள்முதல் செய்து ரூ.50,000 கோடிக்கு மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. டாஸ்மாக் கடைகளை 3 ஆண்டுகளில் மூடுவோம். யாரையும் குடிக்காதே என்று சொல்ல முடியாது. மதுபானத்திற்கு பதிலாக கள் குடிக்கலாம். குடும்பத்தில் முதல் தலைமுறை அரசு ஊழியர்களை உருவாக்க இடஒதுக்கீடு கொண்டு வருவோம். கிராமத்தில் உள்ளவர்களும் நகரத்திற்கு இணையான கல்வி பெற நடவடிக்கை எடுப்போம். ஒரு மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகளை திறப்போம். அதற்கு காமராஜர் பள்ளி என பெயர் சூட்டுவோம். பாஜக தொலைநோக்கோடு கல்வி, சுகாதாரம், நீர் மேலாண்மை, காவல் துறை, மறுசீரமைப்பு ஆகியவற்றை இலக்காக கொண்டு செயல்படுகிறது. காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலை, இரு மடங்கு சம்பளம் கொண்டு வருவோம். தமிழகத்தில் 2 கட்சிகளும் வேண்டாம். மாற்றங்கள் வரவேண்டும். 2024-ம் ஆண்டு வாய்ப்பளியுங்கள் 2026-ம் ஆண்டு எங்களை தேர்வு செய்வதுப்போல செயல்படுவோம். தமிழகம் மாறும். அரசியல் களம் மாறும். 2024-ம் ஆண்டு மாற்றம் ஏற்படும். 40-க்கு 40 வெற்றி பெறுவோம்” என்றார். மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் மாநில பொதுச்செயலாளர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சுமார் 1 கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணமாக அண்ணாமலை நடந்து வந்தார். அப்போது இளைஞர்கள், பெண்களுடன் கைகுலுக்கியும் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
அமைச்சரை கண்டித்து மேல்மா கூட்டுச்சாலையில் 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
இரா.தினேஷ்குமார்
திருவண்ணாமலை
2024-02-21 21:45:00
திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வரிடம் முறையிட்டு மனு கொடுக்க காவல்துறை அனுமதிக்க வலியுறுத்தி மேல்மா கூட்டுச்சாலையில் 2-வது நாளாக 10 விவசாயிகள் இன்று (பிப்.21) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், 20 விவசாயிகளை முதற்கட்டமாக தமிழக காவல்துறை கைது செய்தது. பின்னர் இரண்டாம் கட்டமாக 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்தது. இதற்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டது. அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் எதிரொலியாக 7 விவசாயிகளின் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியூர்களை சேர்ந்தவர்கள், அவர்கள் அனைவரும் நிலமற்றவர்கள், சிப்காட் தொடங்க பல விவசாயிகள் ஆதரிக்கின்றனர்” என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் குறும்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கியும், வடஆளப்பிறந்தான் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் உருவபொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் விவசாயிகளுக்கு எதிராக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் அமைச்சர் எ.வ.வேலுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், மேல்மா சிப்காட் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தி மேல்மா கூட்டுச்சாலையில் இருந்து சென்னை தலைமை செயலகம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட விவசாயிகள் நேற்று (பிப்.20) புறப்பட்டு செல்ல முயன்றனர். அவர்களை, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா கூட்டுச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். விவசாயிகள் சந்திரன், மணிகண்டன், தேவன், பெருமாள், ராஜா, ரேணுகோபால், நேதாஜி, ஏழுமலை, கணேஷ், மாசிலாமணி ஆகிய 10 விவசாயிகள் 2-வது நாளாக இன்றும் (பிப்ரவரி 21-ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், முதல்வரை சந்திக்க காவல்துறை அனுமதிக்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் உடல்நிலை பாதிக்கப்பட்டும், சிகிச்சைக்கு செல்ல மறுத்ததால் கணேசன், பெருமாள் ஆகிய இரண்டு விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மதுரை தேரோடும் வீதிகளில் புதைவழி மின் திட்டம்: ரூ.11 கோடிக்கு டெண்டர் விட்டும் 6 மாதமாக காத்திருப்பு
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-21 19:02:00
மதுரை: மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடக்கும் மாசி வீதிகளில் ரூ.11 கோடிக்கு டெண்டர் விட்டும் இன்னும் கம்பியில்லா புதை வழி மின்வயர் திட்டம் தொடங்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம், புதைவழி மின் திட்டத்துக்காக 'ஸ்மார்ட் சிட்டி' யில் அமைத்துக் கொடுத்த 3 அடுக்கு கம்பார்ட்மெண்ட்கள் அனைத்தும் உடைந்துபோய் கழிவு நீர் தேங்கி நிற்பதால் மின்வாரியத்தால் இந்த திட்டத்தை தொடங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழாவில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். இந்த விழாவில் தேர்களில் எழுந்தருளும் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன், நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். மாசி வீதிகளில் கடந்த காலத்தில் குடியிருப்புகளும், குறைந்தளவு வணிக நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. தற்போது மாசி வீதிகளில் குடியிருப்புகள் அனைத்தும் வணிக நிறுவனங்களாக மாறிவிட்டன. இந்த கட்டிடங்கள், மிக நெருக்கமாகவும், எண்ணற்ற மடங்கு பெருகிவிட்டது. அதனால், ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் திறந்த வெளியில் மின்வயர்கள் மின்கம்பங்களில் இருந்து மாசி வீதிகளில் செல்கின்றன. இந்த வயர்கள், அலங்கோலமாக, சாலைகளின் குறுக்கும், நெடுக்கமாகவும், ஒருவர் மீது மற்றொரு வயர்கள் பின்னி பிணைந்து மாசி வீதிகளின் அழகை கெடுக்கும் வகையில் மின்வயர்கள் செல்கின்றன. அதனால், தேரோட்டம் நடக்கும் நாளில் மாசி வீதி, சித்திரை வீதிகளில் மின்சார வாரியத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இந்த நடைமுறைதான் காலம், காலமாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், தற்போது முக்கிய தேர்திருவிழா நடக்கும் கோயில் மாநகரங்கள் மற்றும் சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகளில் மின்வயர்கள் மேலே செல்லாதவரை கம்பியில்லாத புதை வழி மின் வயர் திட்டமாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால், 3, 500 ஆண்டிற்கு மேல் பழமையான மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடக்கும் மாசி வீதிகளில் தற்போது வரை புதைவழி மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் நிறைவேற்றப்படாத மற்ற கோவில் நகரங்களில் இந்த திட்டம் அந்த கோயில்களின் தேரோட்டம் நடக்கும் கம்பியில்லாத புதை வழி மின் வயர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தப்பட்சம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் நிறைவேற்றப்பட்ட மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் கூட இந்த புதை குழி மின் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மாநகராட்சி சார்பில் தேரோட்டம் நடக்கும் மாசி வீதிகள் மட்டுமில்லாது சித்திரை வீதிகளிலும் கம்பியில்லாத தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான புதைவழி மின் வயர் திட்டம் செயல்படுத்துவதற்காக இந்த சாலைகளில் தொலைத்தொடர்பு கேபிள்கள், மின்சார கேபிள்கள் ஆகியவற்றுக்காக பூமிக்கு அடியில் தனித்தனி கம்பார்ட்மெண்ட்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது வரை மின்சார வாரியம், இந்த சாலைகளில் புதை வழி மின் வயர் திட்டத்தை செயல்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவுக்கு முன்பாகவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தனர். ஆனால், தற்போது வரை செயல்படுத்தவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''மின்சார வாரியம் கம்பியில்லாத புதை வழி மின் வயர் திட்டத்தை செயல்புடுத்த கடந்த 6 மாதத்திற்கு முன்பே ரூ.11 கோடியில் டெண்டர் விட்டுள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் அதற்கான புதைவழி மின் வயர் திட்டத்திற்கான வயர்களை கொள்முதல் செய்து பணியை தொடங்கும்போது, மாநகராட்சி அமைத்துக் கொடுத்த 3 அடுக்கு கம்பார்ட்மெண்ட்கள் அனைத்தும், இடிந்து ஒன்றுடன் ஒன்று கலந்தது தெரிய வந்தது. மேலும், மழைநீர், சாக்கடை நீர் அதில் தேங்கி நிற்கின்றன. அதனால், மாநகராட்சி இந்த இடிபாடுகளையும், கழிவு நீரையும் சீரமைத்துக் கொடுத்தால் மட்டுமே மின்சார வாரியம் புதை வழி மின் வயர் திட்டத்தை மாசி, சித்திரை வீதிகளில் செயல்படுத்த முடியும். தரமில்லாமல் போட்டாதாலே, கம்பார்ட்மெண்ட்கள் இப்படி உடைந்து போய் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதிவிட்டோம். அவர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு சீரமைத்துக் கொடுப்பதாக கூறினர். ஆனால், தற்போது வரை அதை சீரமைத்துக் கொடுக்காததாலே மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி புதை வழி மின் வயர் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை,'' என்றார். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி தொடங்கும்போது, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான கம்பியில்லா புதை வழி மின் வயர் திட்டம் என பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டம் அறிவிப்போடு தற்போது வரை நிற்கிறது. கடந்த காலங்களை போலலே, மின்தடை செய்து சித்தித்திரைத் திருவிழா தேரோட்டம் இந்த ஆண்டும் நடக்கும்நிலை உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ விசாரிப்பதாக தமிழக அரசு தகவல் @ உயர் நீதிமன்றம்
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-21 18:39:00
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு மே 18ம் தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது. ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம் பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஐந்து ஆண்டுகள் காத்திருந்த நிலையில், சட்ட விதிகளுக்கு முரணாக அரசு, இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ மேல் விசாரணை நடத்தி வருகிறது எனக் கூறி பதில்மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை ஒத்திவைப்பு: இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
நாடாளுமன்ற கட்டிடத்துடன் ஒப்பிட்டால் புதுச்சேரி பேரவை கட்டுமான திட்டச் செலவு அதிகம்: ஆளுநர் தமிழிசை
செ. ஞானபிரகாஷ்
புதுச்சேரி
2024-02-21 18:16:00
புதுச்சேரி: “நாடாளுமன்றக் கட்டிடத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி சட்டப்பேரவை கட்டுமான திட்டச் செலவு அதிகம். மக்களின் வரிபணம் மிச்சமாக்கவே சட்டப்பேரவை கட்டுமானக் கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம்” என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி அதற்கான புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் ராஜ் நிவாஸில் இன்று கூறியது: "ஆளுநர் பொறுப்பு ஏற்க ரிஸ்க் எடுத்து ஹெலிகாப்டரில்தான் புதுச்சேரி வந்தேன். அதன்பிறகு மகிழ்வுடன் பணியாற்றி வருகிறேன். அரசியல் வாதியாக இருந்து ஆளுநராக வந்ததால், எதிர் கருத்துக்கும் பதில் தருவது வழக்கம். என்னுடையது சுமுகமான பயணமல்ல. வாரிசு இல்லாத வாரிசு. நேரடி வாரிசாக அப்பாவுடன் பயணித்திருந்தால் பயணம் எளிதாக இருந்திருக்கும். எதிர் இயக்கத்தில் சேர்ந்து நானே உயர்த்திக்கொண்டேன். தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் ஆளுநராக இருந்ததால் அதிகமான முதல்வர்களுடன் பணியாற்றியுள்ளேன். நேர்மையான பயணம் செய்துக் கொண்டிருக்கும்போது, அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும். அதில் உண்மைத் தன்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். சமீபத்தில் சட்டப்பேரவைக் கட்டிடம் கோப்பு தொடர்பாக பேரவைத் தலைவர் கருத்து சொன்னவுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தற்போது அரசியலில் 25 ஆண்டுகள் செப்டம்பரில் நிறைவு செய்யவுள்ளேன். நான் மருத்துவ தொழிலை இழந்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒன்றும் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை. எந்தக் கோப்பிலும் சுய லாபத்தையும் பார்த்ததில்லை. நிர்வாக ரீதியாக கோப்பை பார்க்க வேண்டும். வெளிப்படைத் தன்மையாகத்தான் ஆளுநர் அலுவலகம் இயங்குகிறது. மக்களின் வரிப் பணம் மிச்சமாக்கவே சட்டப்பேரவை கட்டுமானக் கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம். செலவினம் அதிகளவில் உள்ளது. நாடாளுமன்றக் கட்டிடம், தெலங்கானா கட்டிடம் ஆகியவற்றை ஒப்பிடும போது செலவு அதிகம். அவசியமாக செலவிடப்பட வேண்டும் ஆடம்பரமாக செலவிடப்பட்டுவிடக் கூடாது என்பதால் கேள்வி கேட்டுள்ளோம். உபசரிப்பு தளம், விமான தளம் ஆகியவை சில உதாரணங்கள். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. ஆனால், சேற்றை வீசி ஒட்டப்பட்ட போஸ்டரை சில பத்திரிக்கைகள் வெளியிட்டது வருத்தம் தந்தது. நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நல்லவர்களுக்கு ஆதரவு தராவிட்டால் நாங்கள் சென்று விட்டால் வேறு மாதிரியான அரசியல்வாதிகளுக்கு அனைவரும் மாட்டிக்கொள்வீர்கள் என நான் விளையாட்டாக சொல்வதுண்டு. தற்போது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாவதுதான். அது ஆண்டவரிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடம் தான் உள்ளது. அவர்கள் உத்தரவை செயல்படுத்தும் கீழ்படியும் காரியகர்த்தாநான். நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியோ, அதிலும் புதுச்சேரியில் போட்டியிடுவது என்றோ வெளிப்படையாக சொல்லவில்லை. உடன் வெளி மாநிலத்தை சேர்ந்தவள் என்கிறார்கள். இது தாய்வழி மண். அரவிந்தர், பாரதி ஆகியோர் இங்கு வந்து வாழ்ந்த மண். அதனால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று என்னை குறிப்பிடாதீர்கள். புதுச்சேரியை வேறு மாநிலமாக நான் ஒரு நிமிடம் கூட பார்த்ததில்லை. என் தமிழ் பேசும் மக்கள் இங்குள்ளனர். வேறு மாநிலம் என்ற அடையாளத்தை தர வேண்டாம். மருத்துவக் கல்வியில் பத்து சதவீதம் இடஒதுக்கீடு அரசு பள்ளி குழந்தைகளுக்கு தந்துள்ளோம், வாட்டர்பெல் புதுச்சேரியில் அறிமுகம் செய்தோம். அதுபோல் நோ பேக் டே, பஞ்சு மிட்டாய் விவகாரத்தை தமிழகம் உட்பட பல மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதில் சுய லாபம் இல்லை. சகோதரியாகதான் பணியாற்றுகிறேன். அதனால் வேறுபடுத்தாதீர்கள் - அது மனவலி தருகிறது. அதிலும் மன வலிமை பெறுகிறேன். போட்டியிடுவதாக சொல்லவில்லை - வழிகாட்டுதல்படி செயல்படுவேன். அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்த ஆசை - ஆனால் ஒத்துழைப்பு போதியளவில்லை. இன்னும் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைத்து பிராந்தியங்களுக்கும் சென்றுள்ளேன். நான் பணத்தை தாளாகதான் பார்த்தேன். நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள். ரேஷனுக்கு பதில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் தரப்படுகிறது. கடந்த ஆட்சியில் இருந்து தரப்படுகிறது. ரேஷன் கடை திறக்க முடியாது என சொல்லவில்லை. நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் உள்ளன. அதனால் உடன் திறக்க முடியவில்லை. புதுச்சேரியில் எதுவாக தொடர விரும்புகிறீர்கள் என கேட்கிறீர்கள். நான் புதுச்சேரியில் இப்போது துணைநிலை ஆளுநராக பணியாற்றி வருகிறேன். ஆளுநர் சொத்து கணக்கை தாக்கல் செய்ய திமுக தெரிவித்துள்ளதை கேட்கிறீர்கள். நான் சொத்து சேர்க்கவில்லை, எனது கோட்டும் ஒயிட்- நோட்டும் ஒயிட் காசு பற்றி என்னிடம் பேசாதீர்கள்" என்று தமிழிசை கூறினார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-21 18:10:00
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக தெரிவிக்கின்றனர். செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்தியது, அப்போதைய முதல்வருக்கு எதிராக கோஷமிட்டது, கரோனா விதிகளை மீறியது, என அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்குகள் அவை . இந்த 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள ஆறு வழக்குகள், போஸ்டர் ஒட்டியது, முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள்தான். எனவே, 30 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை முன் வைத்த வாதம் தவறு.மேலும், கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேலை வாங்கித் தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்கத் துறையினரே கூறுகின்றனர். அமலாக்கத் துறை ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயார் என வாதிட்டார். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 2,700 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பென் டிரைவில் உள்ளன. எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்கள். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்எல்ஏவாக நீடிக்கிறார். ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதில் இருந்து அவர் செல்வாக்கான நபர் என்பது தெளிவாகிறது. சாட்சிகள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ,செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வேலைவாய்ப்பு முதல் அரசியல் களம் வரை: தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 முக்கிய அம்சங்கள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 16:22:00
சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ஐ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இக்கொள்கையானது, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். மேலும், இக்கொள்கையினை ஐந்தாண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.21) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-யை வெளியிட்டார். சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அச்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும். இதன் பொருட்டு, பாலின வேறுபாட்டினை களைந்திடவும், பெண்களுக்கேற்ற பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திடவும், பெண்களின் நிலையினை மேம்படுத்தும் வகையிலும், தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை தீட்டி, அவற்றை சீரிய முறையில் செயல்படுத்தி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக திகழச் செய்துள்ளது. தமிழக முதல்வரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் இம்மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையானது, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். மேலும், இக்கொள்கையினை ஐந்தாண்டுகளுக்கு பிறகு மறுஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மகளிர் மேம்பாட்டுக்கென தனியான ஒரு கொள்கையை வெகுசில மாநிலங்களே இதுவரை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.மாநில மகளிர் கொள்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்: செயல்படுத்துதல்: அரசில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் பங்குதாரர்களின் பங்கேற்பின் மூலம் முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்த கொள்கையின் நோக்கத்தினை அடைய வழிவகை செய்யப்படும். இக்கொள்கையில் இணைந்துள்ள பல்வேறு துறைகள், தங்கள் திட்டங்களை கொள்கையின் நோக்கங்களுடன் இணைந்து உருவாக்க வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையானது ஒருங்கிணைக்கும் துறையாக இக்கொள்கை செயல்படுத்துதலை கண்காணிக்கும். சமூக நலத்துறை இயக்குநரக அலுவலகத்தில் ‘செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு அலகு’ அமைக்கப்படும். கண்காணித்தல்: தலைமைச் செயலாளரின் தலைமையில் உயர்மட்ட அளவிலான பெண்கள் உரிமைக் குழு, தொடர்புடைய பிற துறைகளுடன் இணைந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்க வேண்டும். இதேபோன்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கொள்கையின் செயலாக்கத்தை கண்காணித்து, எதிர்கொள்ளப்படும் சவால்களை சரிசெய்ய வேண்டும். இக்கொள்கை, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப் பகிர்வை பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்துவதுடன், மகளிர் தங்களுக்குள் புதைந்துள்ள, இதுவரை கண்டறியாத சக்திகளை வெளிக்கொணர்ந்து பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாக இருக்கும். இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நலத்துறை ஆணையர் வே. அமுதவல்லி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
“தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சி' - அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் @ பேரவை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 15:35:00
சென்னை: "தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி, தமிழக முதல்வரின் ஆட்சியாகும்" என்று சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடந்த கேள்வி நேரத்தின்போது, மேட்டூர், பாபநாசம், திருவள்ளூர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். அப்போது பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, “திருவலஞ்சுழி வெள்ளவிநாயகர் கோயிலுக்கு புதிய தேர் வடிவமைப்பதற்கும், சிதலமடைந்து இருக்கின்ற தேர் மண்டபத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தமிழக முதல்வரின் ஆட்சியில் முருகப்பெருமானின் அறுபடை வீட்டுக்கு அவர் சேர்த்திருக்கின்ற பெருமையை கூற விரும்புகிறேன். திருச்செந்தூர் திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் அளவுக்கு திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு பழனியில் ரூ.58 கோடி மதிப்பிலான 58 ஏக்கர் நிலப்பரப்பு பக்தர்களின் நலன்கருதி எதிர்கால சேவைக்கு கையகப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு செயல் வடிவம் தந்த ஆட்சி திமுக ஆட்சி. திருப்பரங்குன்றம் மற்றும் திருநீர்மலை திருக்கோயில்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலேயே சுமார் 26 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தந்ததும் இந்த ஆட்சிதான். அறுபடை வீடுகளுக்கு ஒரே நேரத்தில் சென்று சாமி தரிசனம் செய்ய விரும்பிய வயது முதிர்ந்த பக்தர்களின் ஏக்கத்தை அறிந்து முதல்வர், இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு புரட்சியாக அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட 1,000 பக்தர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவிட்டு அதற்குண்டான நிதி ரூ.1.58 கோடியை அரசின் சார்பில் வழங்கினார். அதன்படி முதற்கட்டமாக 207 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டாம் கட்டமாக மார்ச் 7-ம் தேதி 200 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி தமிழக முதல்வரின் ஆட்சியாகும். எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிய வெள்ளைவிநாயகர் திருக்கோயில் திருப்பணிக்கு ரூ.4.55 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் உருவாக்குவதற்கும், தேர் மண்டபத்தினை சீரமைப்பதற்கும் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-21 15:10:00
சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட பணிப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், தவறாக அளிக்கப்பட்ட புகாரில் மனுதாரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் 30 நாட்களாக சிறையில் உள்ளனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதிலளிக்க அவகாசம் வழங்கி, இந்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (பிப்.23) ஒத்திவைத்தார்.
“திமுக கூட்டணியில் இருந்து விரைவில் வெளியேறும் கட்சிகள்...” - இபிஎஸ் கணிப்பு
என். சன்னாசி
மதுரை
2024-02-21 15:07:00
மதுரை: “திமுகவில் கூட்டணி குறித்து தற்போது வரை பேசிக்கொண்டுதான் வருகின்றனர். இன்னும், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கிறார்கள் என பொறுத்து இருந்து பாருங்கள்" என்று இபிஎஸ் கூறினார். நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, "முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு என அறிவித்த பல்வேறு திட்டங்கள் இதுவரையிலும் செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டாகிய நிலையில், அதற்கு நிதி ஒதுக்கி பணியை தொடங்கவில்லை. மதுரை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மதுரைக்கு குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கினோம். இதற்கான பணிகளும் சுணக்கமாகவே உள்ளது. பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைகின்றனர். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது அவர்களது ஜனநாயகம். போகின்றவர்களை யாரும் தடுக்க முடியாது. இது ஜனநாயக நாடு. கட்சி மாறுவது அவரவர் மன நிலையை பொறுத்தது. விருதுநகரில் ஜவுளி பூங்காவுக்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. எங்களது ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு திமுக அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது. தேர்தலில் வேட்பாளருக்கு ஒதுக்கப்படும் ‘சீட்’ அடிப்படையில் வாரிசு அரசியலை தீர்மானிக்க முடியாது. திமுகவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் இருக்கின்றனர். அது கட்சி அல்ல. ஒரு கம்பெனி. தலைமைக்கு யார் வருகின்றனர் என்பதை பொறுத்துதான் முடிவாகும். திமுகதான் வாரிசு அரசியல் செய்கிறது. அது ஒரு குடும்பக் கட்சி. திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அதற்கு பிறகு அவரது மகன் உதயநிதி... இதற்கு பெயர்தான் வாரிசு அரசியல். ஒரே குடும்பத்தின் கையில் ஒரு கட்சி இருக்கிறது. ஒரு குடும்பத்தின் கைக்குள் ஒரு கட்சி போகக் கூடாது என்பதுதான் எங்களது கொள்கை. அதிமுகவில் சாதாரண தொண்டன் என்னை போன்று உயர்ந்த பொறுப்புக்கு வரமுடியும். தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவாகும். மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்திதான் வாக்கு கேட்க வேண்டும் என்பதில்லை. பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை. கடந்த 2014-ல் ஜெயலலிதா, பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி வாக்கு கேட்கவில்லை” என்றார். த்ரிஷா மீதான அவதூறு பேச்சு குறித்து கேட்டதற்கு, “வேறு கட்சியிலிருந்து வந்தவர் ஏ.வி.ராஜூ. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை கட்சியில் வைத்திருந்தோம். கட்சியின் கட்டுப்பாடு, விதிகளை மீறியதால் ஏ.வி.ராஜூ ஏற்கெனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் கூறுவதை எல்லாம் பெரிது படுத்தக் கூடாது. பதவி இல்லாத விரக்தியில் அவர் பேசுகிறார்" என்றார். சசிகலா, ஓபிஎஸ் காரில் அதிமுக கொடிகட்டி பயணிப்பதாக கேட்டதற்கு, “அவர்களின் காரில் அதிமுக கொடி கட்டி இருக்கும் ஆதாரங்களை வழங்குங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றார். தொடர்ந்து அவர் கூறும்போது, "திமுகவில் கூட்டணி குறித்து தற்போது வரை பேசிக்கொண்டு தான் வருகின்றனர். இன்னும், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கிறார்கள் என பொறுத்து இருந்து பாருங்கள். இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்றம் தீர்ப்புக்கு பிறகும் ஓபிஎஸ் ஆசை நிறைவேறாது. மேகேதாட்டு விவகாரத்தில் அதிமுக அரசு நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டது. இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு திராணி இருந்தால் வழக்கு போட சொல்லுங்கள். மேகேதாட்டு அணை விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக அரசு. இப்பிரச்னையில் எங்கு எதை பேசவேண்டுமோ, அதை பேச திமுக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் சட்ட ம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மக்கள் திமுக அரசின் மீது கொந்தளிப்பாக உள்ளனர். இதே ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனாலும்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்கள் எரிப்பு - கும்பகோணத்தில் 30 பேர் கைது
சி.எஸ். ஆறுமுகம்
கும்பகோணம்
2024-02-21 14:56:00
கும்பகோணம்: நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்கள் எரித்த 30 பேரை கும்பகோணத்தில் போலீஸார் கைது செய்தனர். விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் இன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கூடி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் வெளியான 'அமரன்' பட டீசரில் காஷ்மீர் இளைஞர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும், பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கண்டித்து, அந்தத் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கமலஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது உருவப் படங்கள் எரித்து அவர்கள் கண்டன முழக்கமிட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-21 14:44:00
சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், “எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி கடந்த 6-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், எங்களது மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, கடந்த 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
உலகத் தமிழர்களை இணைக்கும் ஒற்றை அடையாளம் ‘தமிழ்’: முதல்வர் ஸ்டாலின் பெருமித ட்வீட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 14:22:00
சென்னை: “அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்” என உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ். ’தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?’ எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம். பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம். அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
“பேச்சுவார்த்தை இறுதியானதும் நல்ல செய்தி சொல்கிறேன்” - கூட்டணி குறித்து கமல் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 14:10:00
சென்னை: “கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இறுதியானதும் நல்ல செய்தி சொல்கிறேன்.” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து இன்று ஏழாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் தேர்தல் கூட்டணி மற்றும் விஜய்யின் அரசியல் வருகை உள்ளிட்டவை குறித்து பேசினார். அப்போது, “கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இறுதியானதும் நல்ல செய்தி சொல்கிறேன். சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் இறங்குவது விஜய்யின் இஷ்டம். அவர் செய்கிற அரசியல் அவர் பாணி. நான் செய்கிற சினிமா என் பாணி. அவரவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்துகொண்டிருக்கிறோம். விஜய்யுடன் ஏற்கனவே நான் பேசியிருக்கிறேன். அரசியலுக்கு வரவேண்டும் என்று விஜய் சொன்னதும் முதல் வரவேற்பு என்னுடையதாக தான் இருந்தது. கட்சி தொடங்கிய இந்த ஆறு ஆண்டுகால பயணத்தில் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டோம். எது செய்யக் கூடாது, எதை யாரும் செய்யாமல் மறந்துவிட்டார்கள் என்பதையும் கற்றுக்கொண்டோம். இந்த ஆறு ஆண்டுகளில் எந்த பத்திரத்திலும் கையெழுத்து போடவில்லை. யாரிடமும் காசு வாங்கவில்லை என்பதே எங்களின் சாதனை” என்று தெரிவித்தார். இண்டியா கூட்டணி உடன் இணைவது குறித்து கமல் பேசுகையில், “கட்சி அரசியலை மழுங்கடித்து தேசத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தேசத்தைப் பற்றி சுயநலமில்லாமல் சிந்திக்கும் எவருடனும், எனது மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும். ஆனால் நீங்கள் உள்ளூர் அரசியல் நடத்தினால், நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம். கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேனா என்பதை கூட்டணி பேசி முடித்துவிட்டு சொல்கிறேன்.” என்று கூறினார்.
சட்டவியல் அறிஞர் பாலி எஸ்.நாரிமன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 13:11:00
சென்னை: புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வழக்கறிஞராக எழுபதாண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில் சுமார் ஐம்பதாண்டுகள் அவர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதும், குறிப்பிடத்தகுந்த ஒன்றும் ஆகும். பல முக்கியத் தீர்ப்புகளுக்குக் கருவியாக விளங்கிய பாலி நரிமன் சட்டவியலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் தலைமுறை தலைமுறைகளுக்கும் நினைவுகூரப்படும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வழக்கறிஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நில உரிமைக்காக போராடும் மேல்மா விவசாயிகளுடன் முதல்வர் பேச வேண்டும்: ராமதாஸ்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 12:24:00
சென்னை: நில உரிமைக்காக போராடுபவர்கள் மீது அரசே அவதூறு பரப்புவதுடன், அவமானப்படுத்துவதா? என்றும் மேல்மா விவசாயிகளுடன் முதல்வர் பேச வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசின் நிலப்பறிப்பை எதிர்த்து, மண்ணுரிமைக்காக போராடி வரும் தங்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக செய்யாறில் இருந்து நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதி விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். தங்களைச் சந்திக்க முதல்வர் மறுத்து விட்டதைக் கண்டித்து 10 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளுக்கு எதிரான தமிழக அரசின் அடக்குமுறை அதிர்ச்சியளிக்கிறது. மேல்மா விவசாயிகள் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. விவசாயிகளின் குறைந்த பட்ச உரிமைகளைக் கூட மதிப்பதற்கு தமிழக அரசு தயாராக இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய செயலாகும். செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவை விரிவாக்கம் செய்வதற்காக தங்களுக்கு சொந்தமான 2,700-க்கும் கூடுதலான விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப் படவிருப்பதைக் கண்டித்தும், அம்முயற்சியை கைவிட வலியுறுத்தியும் மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தமிழக அரசு, அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது நியாயமற்றது. நில உரிமைக்காக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத தமிழக அரசு, அவர்கள் போராட்டம் நடத்திய இடத்தை சிதைத்தது. 7விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது. பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் அவர்கள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை அரசு திரும்பப் பெற்றது. அதன் பிறகும் மேல்மா கூட்டு சாலை அருகில் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கு நிலம் இல்லை’ என்று அவதூறு குற்றஞ்சாட்டினார். அமைச்சரின் அவதூறுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள், வடஆளப்பிறந்தான் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் உருவபொம்மையை எரித்து முழக்கமிட்டனர். அதுமட்டுமின்றி,குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிலம் இல்லை; கைது செய்யப்பட்டவர்கள் நிலமற்றவர்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த பொய்யான கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், தொடர்ந்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும், மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க, செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் இருந்து நேற்று புறப்பட்டனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். குறைந்தது 20 விவசாயிகளையாவது முதல்வரைச் சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்திய நிலையில், 5 பேருக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக தெரிவித்த காவல்துறை, பின்னர் அவர்களை சந்திக்க முதல்வர் விரும்பவில்லை என்று கூறி அனுமதி மறுத்து விட்டது. அதைக் கண்டித்து தான் மேல்மா கூட்டு சாலையில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில் 10 விவசாயிகள் உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் நெருக்கடி அளிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தகது. இந்தியாவிலேயே நில உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்ட அவலம் தமிழ்நாட்டில் தான் நடைபெற்றது. மண்ணுரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது, சட்டப்பேரவையில் முதல்வர் முன்னிலையிலே அமைச்சர் எ.வ.வேலு அவதூறு பரப்புகிறார். நிலத்தை கையகப்படுத்தும் தொழில்துறை மற்றும் வருவாய்த்துறைக்கோ, விவசாயிகளின் நலன் காக்கும் வேளாண் துறைக்கோ அமைச்சராக இல்லாத எ.வ. வேலுவின் இந்த அத்துமீறலை கண்டிக்க வேண்டிய முதல்வர், அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தங்கள் தரப்பு நியாயத்தை விளக்க விரும்பும் விவசாயிகளையும் முதல்வர் சந்திக்க மறுக்கிறார் என்றால் விவசாயிகளின் நலன் குறித்து பேசும் தகுதியை அவர் இழந்து விட்டார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது என்றாலும், விவசாயிகளை முதல்வர் சந்திக்க எந்த தடையும் இல்லை. ஒரு பக்கம் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விட்டு, இன்னொரு புறம் விவசாயிகள் மீது அவதூறு பரப்புவது, அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற செயல்களில் அரசு ஈடுபடுவது சரியல்ல. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக மேல்மா விவசாயிகளை அழைத்து பேச வேண்டும்; அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்த 6 ‘எய்ம்ஸ்’கள் அடுத்தடுத்து திறப்பு - மதுரை..?
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-21 12:11:00
மதுரை: மத்திய அமைச்சரவையின் ஒரே யொரு கூட்டத்தில் முடிவெடுத்த 6 ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளை நேற்று முதல் அடுத்த நாட்களில் பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிலையில் அவரால் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் கட்டுமானப்பணியே தொடங்கா தது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி நாடு முழு வதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டிய 6 ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார். நேற்று ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து ராஜ்கோட், மங் களகிரி, பதிண்டா, ரேபரேலி மற்றும் கல்யாணி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளையும் திறந்து வைக்க இருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் மதுரையில் அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இன்னும் கட்டுமானப் பணியே தொடங்கப் படவில்லை. கடந்த மக்களவைத் தேர்த லுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி, அதாவது 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். தற்போது அடுத்த மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் தற்போது வரை கட்டுமானப் பணியே தொடங்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் அண் ணாமலை, ‘‘மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிலத்தை கொடுக்க 5 ஆண்டுகள் ஆனது. அதற்குள் கரோனா வந்தது. இப்படி திராவிட ஆட்சிக் காலத்தில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டத்துக்கு ஒத்துழைக்காதது, ‘கரோனா’ போன்ற இயற்கை பேரிடராலே தாமதமானது,’’ என் றார். ஆனால், மதுரை ‘எம்பி’ சு.வெங்கடசேன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘எங்கள் எம்ம்ஸ் எங்கே’ என்று கேள்வி எழுப்பி, அடுத்தடுத்த 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறந்து வைக்கிறார் பிரதமர். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் மதுரையைத் தவிர முடிவெடுக் கப்பட்ட அனைத்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளும் திறக்கப் படுகின்றன. தமிழ்நாட்டுக்கு நீங்கள் தருவது தப்புத்தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?’’ என்று கேள்வி எழுப்பி யுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு திட்டமிட்டே தமிழகத்தை வஞ்சிக் கிறது. அவர்கள் நினைத்தால் ( மத்திய அரசு ) மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்க முடிகிறது. ஆனால், மதுரைக்கு மட்டும் நேரடியாக நிதி ஒதுக்காமல் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டுள்ளனர். மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனையின் திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி. இதில் மத்திய அரசின் பங்களிப்பு நிதி ரூ.350 கோடி. இந்த நிதியைக்கூட இன்னும் மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. மதுரைக்கு முன் அறிவித்த, இதனுடன் சேர்ந்து ஒப்புதல் வழங்கப்பட்ட நாட்டின் மற்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்படு கின்றன. ஆனால், மதுரையில் கட்டுமானப் பணி கூட தொடங்கப் படவில்லை என்பது மத்திய அரசின் ஓரவஞ்சனை தான். ஜைக்கா நிறுவனம், தவணை அடிப்படையில்தான் நிதியை ஒதுக்கும். அந்நிறுவனம் இதற்கு மேல் கடன் வழங்குவதை தள்ளிப் போட முடியாது. அதனால், மார்ச்சுக்குள் ஒப்பந்தம் விட்டு பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது. ஆனால், மத்திய அரசின் பங்களிப்பு நிதியான ரூ.350 கோடியை விடுவித்தால் உடனடி யாக மக்களவைத் தேர்தலுக்கு முன் பணிகளைத் தொடங்கிவிடலாம். ஆனால், அந்த மனசுகூட மத்திய அரசுக்கு இல்லை என்பதுதான் வேதனையாக உள்ளது’’ என்றார். நாடு முழுவதும் 6 எய்ம்ஸ்கள் கட்டப்பட்டு அடுத்தடுத்து திறக்கப்படும் நிலையில் மதுரையில் கட்டுமானப்பணிகள் தொடங்கப் படாதது தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை எய்ம்ஸ் குறித்து ஆர்டிஐ ஆர்வலர் பாண்டிய ராஜா கூறுகையில், ‘‘மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக ஆர்டிஐ யில் எப்படி கேள்வி கேட்டாலும் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு இதுவரை பதிலே இல்லை. ஆனால் 2026-ல் முடிந்து விடும் என்ற பதில் மட்டுமே இதுவரைக்கும் கிடைத்து உள்ளது. எம்பிக்கள் கேள்வி கேட்டாலும் இதே நிலைதான் உள்ளது. ஆர்டிஐ - கேள்விக்கு சரியான பதில் இல்லை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்குவது தொடர்பாக விளக்கங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் பொது மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் விலகும். தற்போது இருக்கும் நிலைமையைப் பார்க்கும் போது மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் மேலும் தாமதமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்.
சமூக வலைதளங்களில் இணைந்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 11:56:00
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெயரில் புதிதாக சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிரேமலதா.விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (பிப்.21) முதல் அதிகாரபூர்வமான பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதளங்களை தொடங்கி கட்சி ரீதியான அறிவிப்புகளும், மக்களுக்கான செய்திகளும், தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்து அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மறைந்தார். விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததால் கட்சிப் பணிகளில் தீவிரமாக அவரால் ஈடுபட முடியவில்லை. அவருக்கு பதிலாக அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பானை சின்னம் கேட்கும் விசிக - தேர்தல் ஆணையத்திடம் மனு
செய்திப்பிரிவு
கூறியதாவது
2024-02-21 11:39:00
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நேற்று டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: முன் அனுமதி பெறாததால் தேர்தல் ஆணையர் யாரையும் சந்திக்க இயல வில்லை. எனினும், அதற்கென உள்ள பிரிவில் மனுவை சமர்ப்பித்துள்ளோம். மக்களவைத் தேர்தலில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் விசிக வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. எனவே, பானை சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க கோரியுள்ளோம். கடந்த தேர்தலில் தங்களது சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியது வெற்றியை கருத்தில் கொண்டே தவிர, விசிகவை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. பொதுத்தொகுதியில் விசிக போட்டியிடக் கூடாது என்ற எந்த வரையறையும் இல்லை. இது புதிய கோரிக்கையும் அல்ல. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே அடிப்படையில் மக்களவைத் தேர்தலிலும் ஒரு பொது தொகுதி ஒதுக்க வேண்டும் என கேட்கிறோம். தேர்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை என்னும் சரத்பவாரின் கருத்து புறந்தள்ளக் கூடியது அல்ல. அண்மை காலமாக ஆளுங்கட்சியின் தலையீடுகள் இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. அது அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் உயர்நிலைக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பதாக கட்சியின் நிலைப்பாட்டை திருமாவளவன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் தேர்தல் அறிவிப்புக்கு காத்திராமல் களமிறங்கிய கட்சிகள்
செய்திப்பிரிவு
திண்டுக்கல்
2024-02-21 11:30:00
திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கா மல் அதற்கு முன்பே கட்சிகள் களமிறங்கி தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதி தவிர, திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. வேடசந்தூர் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியில் சேர்ந்துள்ளது. திண்டுக்கல் தொகுதியில் திமுக, பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்பே தொடங்கி விட்டன. திமுக: திண்டுக்கல் தொகுதியில், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பொதுக் கூட்டத்தை நடத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் பேசினார். கூட்டத்தை காட்ட ஏராளமான பொது மக்களை திமுக நிர்வாகிகள் திரட்டி அழைத்து வந்திருந்தனர். மேலும் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் திட்டங்களால் பயன் அடைந்துள்ளீர்களா என ஆட்சியின் நிறை, குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் வார் ரூம் ( உதவி மையம் ) அமைக்கப்பட்டுள்ளது. திமுகவினரின் செயல்பாடுகள் மட்டுமல்லாது எதிர்க் கட்சியினரின் செயல்பாடுகளையும் கண்காணித்து அவர்களின் குற்றச் சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த உதவி மையம் செயல்படும் என கட்சி நிர்வாகிகள் கூறினர். அமைச்சர்கள் சுறுசுறுப்பு: திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கர பாணி ஆகிய இருவரும் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தொகுதிக்குள் கிராம வாரியாகச் சென்று அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றுவது எனச் செயல்பட்டு வருகின்றனர். கடந்த முறை, திண்டுக்கல் தொகுதி அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை கூட்டணியில் பாமக இடம் பெறுமா எனத் தெரியவில்லை. கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம், பாமக தோற்றது. அதனால் கூட்டணியில் இடம் பெற்றாலும் இந்த தொகுதியை தவிர்க்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அதிமுக சார்பில் பூத் கமிட்டி உள்ளிட்ட தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தேர்தல் பணிகளை முடுக்கி விடாமல் கூட்டணி அமைந்த பிறகு முழுமையாக களம் இறங்கலாம் என அமைதி காத்து வருகின்றனர். பா.ஜ.க.: பாஜகவினர் தேர்தல் அலுவலகத்தை, திண்டுக்கல்லில் திறந்து பணிகளை தொடங்கி விட்டனர். அடுத்த கட்டமாக, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் அலுவலகங்களைத் திறக்க முடிவு செய்துள்ளனர். மேலும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கிக் கூறி வாக்கு சேகரிக்கும் பணிகளை ஒன்றியம், நகரம், கிராமம் வாரியாக மேற்கொள்ளுமாறு கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி: திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட நிரஞ்சனா என்பவரை நாம் தமிழர் கட்சி களம் இறக்கி உள்ளது. இதையடுத்து அக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு, வேட்பாளரை அறிமுகம் செய்து கட்சி நிர்வாகிகள் பணிகளைத் தொடங்கி விட்டனர். வேட்பாளர் பெயர், கட்சியின் சின்னம் என நகரில் போஸ்டர்கள் ஒட்டி வாக்கு சேகரிக்கத் தொடங்கிவிட்டனர். திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம் வாரியாக வேட்பாளர் சந்திப்பு கூட்டத்தை கட்சி நிர்வாகிகள் நடத்தி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வரை காத்திருக்காமல் திண்டுக்கல் தொகுதியில் அனைத்து கட்சியினரும் களம் இறங்கி தேர்தல் பணிகளை மும்முரமாக தொடங்கி விட்டதை பக்கத்து மாவட்ட கட்சியினர் வியப்போடு பார்க்கின்றனர்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் | மகளிர் ‘ஜிம்’ முதல் மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா வரை - முக்கிய அம்சங்கள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 11:29:00
சென்னை: சென்னை மாநகராட்சிக்கான 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் மேயர் பிரியா. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: > மாநகராட்சி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ 45 லட்சம் ஒதுக்கீடு. > எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 2 சீருடை வழங்க ரூ. 8.50 கோடி ஒதுக்கீடு. > 255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.7.46 கோடி ஒதுக்கீடு. > சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.3.59 கோடி ஒதுக்கீடு. > பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.61 லட்சம் ஒதுக்கீடு. > சென்னை ராயப்பேட்டையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு. > 419 சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் வகையில் ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு. > திறமைமிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு. > 338 பள்ளிகளுக்கு ஐந்து பச்சை வண்ண பலகைகளை வழங்க ரூ.92.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். > சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு. > சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு. > சென்னையில் 8 நீர்நிலைகளை ரூ.10 கோடி செலவில் புனரமைக்க திட்டம். > வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சமாக வழங்கப்படுகிறது. > 200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
சமவேலைக்கு சம ஊதியம்: இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக - அன்புமணி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 10:44:00
சென்னை: தமிழகத்தில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் உடனே ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது. 2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4,100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது. ஊதிய முரண்பாடு 15 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 19 ஆம் தேதி முதல், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் முதல் நாளான 19 ஆம் நாள் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து 20 ஆம் தேதியான நேற்று மீண்டும் போராட்டம் நடத்திய போதும் அவர்களை காவல்துறை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தது. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து கொடுமைக்குள்ளாவதை நியாயப்படுத்தவே முடியாது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை நான் மட்டும் வலியுறுத்தவில்லை. இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினே, ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது நியாயமற்றது. இடைநிலை ஆசிரியர்கள் எப்போது போராட்டம் நடத்தினாலும், அதை ஒடுக்குவதே அரசின் கொள்கையாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் அக்குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதனால், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை அக்டோபர் 5 ஆம் நாள் காவல்துறை விரட்டியடித்தது. பலரை கைது செய்தது. அப்போதும் மூவர் குழுவின் அறிக்கை அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்று அரசு மீண்டும் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் 5 மாதங்களாகியும் மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் தான் இடைநிலை ஆசிரியர்கள் இப்போது மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதியாகும். தங்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அதைவிடக் கொடுமையாக அநீதியாகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு, இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள்... அத்திக்கடவு - அவிநாசி திட்டம் திறப்பு எப்போது?
இரா.கார்த்திகேயன்
திருப்பூர்
2024-02-21 10:07:00
திருப்பூர்: கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மற்றும் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்டது தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டம். 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, 2016-ம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆய்வு பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ.3.27 கோடியை ஒதுக்கினார். அதைத்தொடர்ந்து, அரசாணை வெளியிட்டார். அவிநாசியில் 2017-ம் ஆண்டு ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு ரூ.1652 கோடி நிதியில் முழுமை அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் பழனிசாமி அவிநாசியில் பேசும்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 80 சதவீதத்துக்கும் அதிகமாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு 34 மாதங்கள் ஆட்சியில் இருந்த திமுக இன்னும் திட்டத்தை திறந்து வைக்கவில்லை என்றார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுடன், விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வலியுறுத்தி அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் மார்ச் 1-ம் தேதி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சுப்பிரமணியம் கூறியதாவது: 2019 பிப்.28-ம் தேதி அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவிநாசிக்கு நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். 2 ஆண்டுகளில் திட்டம் முழுமையாக நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வரும் என உறுதி அளித்தார். இதையடுத்து 2019 மார்ச் மாதம், பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 10 மாதங்களில் 1045 குளம், குட்டைகளின் நீர் வழித்தடங்கள் ஆய்வு, டிசைன் செய்யப்பட்டு, 2019 டிச.24-ம் தேதி பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் உலகையே அச்சுறுத்திய கரோனாவால் தாமதமானது. ஆனால், அந்த கால கட்டத்திலும் கூட, 83 சதவீதம் பணிகள் நிறைவடைந்தது. எஞ்சிய 17 சதவீத பணிகள்தான், இன்றைக்கு 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது திட்டத்தை திறக்க பவானி ஆற்றில் தண்ணீர் இல்லை. இந்த திட்டத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. முழுமையாக அனைத்து குளம், குட்டைகளில் சோதனை ஓட்டம் நடைபெறவில்லை என, திட்டத்தை திறக்காமல் இருக்க பல்வேறு காரணங்களை அடுக்குகின்றனர். சோதனை ஓட்டம் நிறைவடைந்து ஓராண்டாகிறது. இன்றைக்கு திட்டத்துக்காக பம்பிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து திறந்துவைக்க தண்ணீர் தேவையில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக திட்டத்தை தொடங்கி வைத்துவிடலாம். மக்களவைத் தேர்தல், வாக்கு எண்ணிக்கை, தேர்தல் நன்னடத்தை விதிகள், அதன் பின்னர் வறட்சி என மேலும் தாமதமாகும் என்பதால், தற்போது அரசு நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, திட்டத்தை தொடங்கிவைக்க வேண்டும் என்பதே, இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 தலைமுறைக்கு மேலான மக்களின் எதிர்பார்ப்பு எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கோவை - சிவாஜி காலனியில் பொதுமக்கள் பேனர்
செய்திப்பிரிவு
கோவை
2024-02-21 09:55:00
கோவை: இடையர்பாளையம் அருகே உள்ள சிவாஜி காலனியில் 2,500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி கோரி அப்பகுதியினர் ஆட்சியர், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே பலமுறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து தராததை கண்டித்து வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, அப்பகுதி மக்கள் பேனர் வைத்துள்ளனர். இது குறித்து சிவாஜி காலனி விரிவாக்க நலச்சங்கத் தலைவரும், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலருமான நடராஜ் கூறும்போது, ‘‘சிவாஜி காலனி பகுதியில் சாலை மற்றும் முறையான சாக்கடை வசதி இல்லாததால், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, கடந்த 8 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம். அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை திரும்பப் பெற்று வாக்களிப்போம்’’ என்றார்.
தமிழை பயன்பாட்டு மொழியாக்க உறுதியேற்போம்: உலக தாய் மொழி தினம் - டிடிவி வாழ்த்து
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 09:48:00
சென்னை: நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் இன்று (பிப்.21) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மொழிகள் பல இருப்பினும் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே சிந்தனை எனும் சிற்பத்தை செதுக்கி ஒருவரின் அறிவாற்றலை பெருக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் உலக தாய் மொழிகள் தினம் இன்று. தாய் மொழியாம் தமிழ் மொழியை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவில் கொள்வதோடு, நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.” எனக் கூறியுள்ளார்.
பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை
செய்திப்பிரிவு
திருப்போரூர்
2024-02-21 07:57:00
திருப்போரூர்: மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் `என் மண் என் மக்கள்' யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேசுவரத்தில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அண்ணாமலை பல இடங்களில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் செங்கல்பட்டு, தாம்பரம், நேற்று திருப்போரூர், பல்லாவரம் பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டார். திருப்போரூரில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை முழுவதுமாக மாற்றக்கூடிய யாத்திரையாக ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை உள்ளது. திருப்பரங்குன்றத்தில் நிலத்திலும், திருச்செந்தூரில் கடலிலும், திருப்போரூரில் ஆகாயத்திலும் என்று 3 இடங்களில் முருகப் பெருமான் அசுரர்களை அழித்தார். அதேபோல அசுரர்களை நாம் களைய வேண்டும். திருப்போரூர் கோயிலில் போதிய அடிப்படை வசதி இல்லை. திமுக ஆட்சியில் கடந்த 33 மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும், பணிகளும் நடைபெறவில்லை. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் கனவு உலகில் வாழும் முதல்வர் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார். பாஜகவின் 295 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தமிழகத்தில் இருந்து நம்முடைய பங்காக 39 எம்.பி-க்களை மக்களவைக்கு அனுப்ப வேண்டும். ஸ்ரீ பெரும்புதுார் தொகுதியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். 2026-ம் ஆண்டு அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், 2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும். ஊழலுக்கு இலக்கணமாக, தமிழகத்தின் திராவிட கட்சிகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் 7 மாவட்ட விவசாயிகள் வேதனை
இ.ஜெகநாதன்
சிவகங்கை
2024-02-21 06:27:00
சிவகங்கை: காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு பட்ஜெட் டில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் 7 மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக 65 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த திட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து தெற்கு வெள்ளாறு, வைகை, கிருதுமால் நதி, குண்டாறு வரை 262 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து, உபரி நீரை கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்ல முடிவு செய் யப்பட்டது. மேலும், இந்த திட்டத்தை 3 கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. முதல்கட்டத்தில் கரூர் மாவட்டம் காவிரி மாயனூர் கதவணையில் இருந்து புதுக் கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118.5 கி.மீ. தொலைவுக்கும், 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றில் இருந்து வைகை ஆறு வரை 109 கி.மீ. தொலைவுக்கும், 3-ம் கட்டமாக வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதி வழியாக குண்டாறு வரை 34 கி.மீ. தொலைவுக்கும் கால்வாய் அமைக்கப்படும். இந்த திட்டத்தை 2021 ஜனவரி யில் அப்போதைய முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக காவிரி மாயனூர் கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் அமைக்க மொத்தம் ரூ.6,941 கோடி தேவைப்பட்ட நிலையில், ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, 11 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்ட ரூ.331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் தொடங்கின. அந்தப் பணி 3 ஆண்டு கள் கடந்தும் மந்தமாக நடந்து வரு கிறது. சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியும் தொய் வடைந்துள்ளது. தொடர்ந்து நிதி ஒதுக்கீடும் இல்லாததால், அடுத்த கட்ட பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில், தமிழக பட்ஜெட் டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் 7 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்த னர். இதுகுறித்து காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் ராம.முருகன் கூறியதாவது: 30 ஆண்டுகளானாலும்... இந்த திட்டத்தில் 7 மாவட்டங் களில் 1,054 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, 1,09,962 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தம் ரூ.21,341 கோடி தேவைப்படும். இந்த தொகையை ஒரே காலத்தில் ஒதுக்கீடு செய்து 3 கட்டப் பணி களையும் ஒரே நேரத்தில் தொடங்கி னால் மட்டுமே, 10 ஆண்டுகளுக் குள்ளாவது கால்வாய் பணியை முடிக்க முடியும். திமுக அரசு பொறுப்பேற்றதும் இந்த திட்டத் துக்கு மேலும் ரூ.200 கோடி ஒதுக்கு வதாக அறிவித்தது. அந்த நிதியும் ஒதுக்கவில்லை. 2, 3-ம் கட்டப் பகுதிகளில் இதுவரை நிலம் கையகப்படுத்தும் பணியைக்கூட தொடங்கவில்லை. இதேநிலை நீடித்தால், 30 ஆண்டுகள் ஆனா லும் கால்வாயை அமைக்க முடி யாது. இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்திலிருந்து பாம்பன் வரை மீனவர்கள் பேரணி
செய்திப்பிரிவு
ராமேசுவரம்
2024-02-21 06:23:00
ராமேசுவரம்: இலங்கை சிறையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேசுவரத்திலிருந்து பாம்பன் வரை நேற்று மீனவர்கள் பேரணி நடத்தினர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 3-ம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேரை விடுதலை செய்த ஊர்க்காவல் துறை நீதிமன்றம், 2-வது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்தது. இதைக் கண்டித்தும், மீனவர்களின் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரியும் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் கடந்த 17-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தமிழக மீனவப் பிரதிநிதிகள், டெல்லியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். வேலைநிறுத்தத்தின் 4-வது நாளான நேற்று ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து பேரணியாகச் சென்று, ராமநாதபுரம் ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.அதன்படி நடைபெற்றஇந்தப் பேரணியில் பெண்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். பேரணி பாம்பனை அடைந்தபோது, ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் மீனவர்களை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மீனவர்கள் அறிவித்தனர். மேலும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் வரும் 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாகவும், மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும் தொடர்ந்து நடைபெறும் என்றும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் 213 பேர் தேர்வு: அமைச்சர் அன்பரசன் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 06:21:00
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரிய தலைமைஅலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்தெடுக்கப்பட்ட 63 உதவி பொறியாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 3 பண வசூலாளர்களுக்கு பணியிட ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், “அனைத்து அரசு காலிப் பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்றுதமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,598 பேருக்கு நியமனஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு முதன்முதலாக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 63 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்காக அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட உதவிப் பொறியாளர்கள் தங்கள் கடமை உணர்ந்து பணியாற்ற வேண்டும். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம்வாரியத்துக்கு 64 இளநிலைஉதவியாளர், 68 பண வசூலாளர்கள், 7 சுருக்கெழுத்து தட்டச்சர், 11 சமுதாய அலுவலர் மற்றும் 63 உதவிப் பொறியாளர்கள் என 213 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது” என்றார். நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, வாரிய மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஸ்டெர்லைட் தொடர்பான ஆலோசனையை நிராகரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 06:15:00
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய நலனை கருத்தில்கொண்டு கடுமையான நிபந்தனைகளுடன் ஸ் டெர்லைட் ஆலையை இயக்கஅனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒத்துக்கொள்ளும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற வழக்கில் ஆலோசனை தெரிவித்துள்ளது. மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட்ஆலை திறப்புக்கு கடும் எதிர்ப்பையும், அதற்கான காரணத்தையும் விளக்கிய பின்னர், உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட ஆலோசனையை முன்வைத்திருப்பது நியாயமற்றது. ஸ்டெர்லைட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள்ஓராண்டு காலம் நடத்திய போராட்டத்தின் உச்சகட்டத்தில், மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய கருத்து இந்த உயிரிழப்புகளையும், படுகாயம் அடைந்த மக்களின் வலிகளையும், வேதனைகளையும் புறந்தள்ளுவதாகும். எனவே, தமிழக அரசுஇந்த ஆலோசனையை நிராகரிப்பதுடன் இதுவரையிலும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 06:14:00
சென்னை: தமிழக பட்ஜெட்டில், விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டத்துக்கு மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் பயணிகள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில், இந்த திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தொலைவில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டது. இப்பாதை மற்றும் 12 நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.4,500 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் இருந்து எந்தவித ஒப்புதலும் கிடைக்காமல் இருந்தது. இதற்கிடையில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்தடிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்துக்கு நேரடியாக செல்ல மின்சார ரயில்மற்றும் மெட்ரோ ரயில் வசதி கிடையாது. இதுதவிர, நகரின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல போதிய இணைப்பு வாகன வசதி இல்லாததால் பயணிகள் சிரமப்பட்டனர். தற்போது, இணைப்பு வாகனவசதி படிப்படியாக ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும், விரைவாக செல்ல மெட்ரோ ரயில் சேவை வழங்க வேண்டும் என்றும், இதற்காக, விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ளபேருந்து முனையம் வரை மெட்ரோரயிலை நீட்டிப்பதற்கான விரிவானதிட்ட அறிக்கை ரூ.4.625 கோடிமதிப்பில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என்றுதெரிவிக்கப்பட்டது. இதற்கு மெட்ரோ ரயில் பயணிகள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இத்திட்டத்தை விரைந்துசெயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் கூறுகையில், “சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோரயில் விரிவாக்கம் திட்டத்துக்கு மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைநாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக, காத்திருக்காமல், மாநில அரசு மூலதனபங்களிப்பு செய்து, நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவாக தொடங்க வேண்டும். இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
சென்னை நகர அஞ்சல் துறை சார்பில் 22,181 விபத்துக் காப்பீடுகள் விற்பனை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 06:13:00
சென்னை: 2022-23-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் துறை சார்பில் 22,181 விபத்துக் காப்பீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டுவரும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மற்றும்டாடா ஏஐஜி காப்பீட்டு நிறுவனம் இணைந்து விபத்துக் காப்பீடுகளை விற்பனை செய்து வருகின்றன. இந்த காப்பீடு எடுத்த புருஷோத்தமன் என்பவர் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வாரிசுதாரர் இளங்கோஎன்பவருக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. சென்னை நகர மண்டல அஞ்சல்துறை சார்பில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான காசோலையை அஞ்சல் சேவைகள் இயக்குநர் ஜெனரல் ஸ்மிதா குமார் வழங்கினார். டாடா ஏஐஜி நிறுவனம் வழங்கும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டுக்கு ஆண்டொன்றுக்கு பிரீமியம் தொகையாக ரூ.520 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. உடல் உறுப்புகள் நிரந்தரமாக அல்லது பகுதியாக செயலிழத்தல் உள்ளிட்டவற்றுக்கும் இந்த காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. 2022-23-ம் நிதியாண்டில் தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில்81 ஆயிரம் விபத்து காப்பீடுகளும், இதில், சென்னை நகர அஞ்சல் துறை சார்பில் 22,181 காப்பீடுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு எண் வழங்கியதற்காக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைக்கு பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச அஞ்சல் சங்கம் சார்பில்நடத்தப்பட்ட சர்வதேச கடிதம்எழுதும் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஜஃபீரா என்ற பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி, சென்னை நகர மண்டலஅஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன், சென்னை நகர மண்டல அஞ்சல் சேவைகள் இயக்குநர் மேஜர் மனோஜ், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் சுயாதீன இயக்குநர் ஏ.காளியண்ணன், துணை பொது மேலாளர் ஜி.கே.கோவிந்தராஜ், உதவிப் பொது மேலாளர் என்.ஆர்.திவாகரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மெட்ரோ ரயில் பணி காரணமாக பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 06:10:00
சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக, பரங்கிமலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, பரங்கிமலை பகுதியில் 21-ம் தேதி (இன்று) முதல் ஒரு வாரகாலத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.கே.என்.சாலை மற்றும் ரயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்துவரும் வாகனங்கள், நேராக பரங்கிமலை அஞ்சல் நிலையம் நோக்கி செல்ல அனுமதிஇல்லை. ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் செல்வதற்கு வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ செல்லலாம்.
காவல் மண்டலங்களுக்கிடையே தடகளப் போட்டி; 45 பதக்கங்களுடன் சென்னைக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 06:05:00
சென்னை: காவல் மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் சென்னை காவல் துறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. வெற்றி பெற்ற வீரர்களை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார். தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான 63-வது தடகளப் போட்டி கோயம்புத்தூரில் உள்ள நேரு ஸ்டேடியத்தில், கடந்த 13 முதல் 16-ம்தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை பெருநகர காவல், ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை என 9 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில், சென்னை பெருநகர காவல் அணியின் ஆண்கள் தடகள அணியினர் 6 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என 16 பதக்கங்களும், பெண்கள் தடகள அணியினர் 14 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என 29 பதக்கங்களும் பெற்றனர். சென்னை பெருநகர காவல் தடகள அணி மொத்தமாக 20 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களை பெற்றது. மேலும், சென்னை பெருநகர காவல் அணிஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துக்கான முதல் பரிசு கேடயத்தை பெற்று அசத்தியது. மேலும் சென்னை பெருநகர காவல் அணியினர், பெண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் முதலிடமும், ஆண்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் 2-ம் இடமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மூத்தோர் காவல் பிரிவில் சென்னை பெருநகர காவல்அணியினர் 8 தங்கம், 4 வெள்ளி 2 வெண்கலம் என 14 பதக்கங்களைப் பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்ற சென்னை காவல் வீரர், வீராங்கனைகளை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்நிகழ்வின்போது கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) கபில்குமார் சி.சரத்கர், இணை ஆணையர் கயல்விழி, துணை ஆணையர்கள் மணிவண்ணன், ஜெயகரன் உடனிருந்தனர்.
ஏமாற்றம் அளித்த தமிழக வேளாண் பட்ஜெட்: பி.ஆர்.பாண்டியன் கருத்து
செய்திப்பிரிவு
திருவாரூர்
2024-02-21 06:00:00
திருவாரூர்: தமிழக வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழக வேளாண் பட்ஜெட்டில் மண்ணுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கட்டுக்கடங்காத பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மருந்துகள் போன்றவற்றின் விற்பனையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மண்ணுயிர் பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது பொருத்தமற்றது. வேளாண் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படுகிறதே தவிர, தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து குறைபாடு நீடித்து வருகிறது. பட்ஜெட்டில் அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், விளம்பரமாகவே தொடர்கிறது. குறிப்பாக, வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்துக்கு இரு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்கு 2 நாட்களுக்குகூட அனுமதிக்காமல், வெறும் வாசிப்பது மட்டுமே சம்பிரதாய சடங்காக மேற்கொள்வது, விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அதே பட்டியல்களையே இந்தஆண்டும் வாசிப்பதால், எந்தப்பயனும் இருக்காது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதியின்படி, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குவது குறித்து இதுவரை தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோல, இந்த பட்ஜெட்டில் காவிரி-வைகை -குண்டாறு இணைப்புத் திட்டம், ஏரிகள், பாசன வடிகால்கள் மற்றும் ஆறுகள் தூர்வாருவதற்கான சிறப்புத்திட்டங்கள் குறித்தும் இடம்பெறவில்லை. மேலும், பொது விநியோகத் திட்டத்தில், பாமாயில் விற்பனையை தடைசெய்து, தேங்காய்எண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், அதுகுறித்தஅறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் இந்த பட்ஜெட் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்து உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சமர்ப்பித்த மனுவை உச்ச நீதிமன்ற முடிவுக்கு பிறகு பட்டியலிட உத்தரவு
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-21 05:53:00
மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி, ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி தாக்கலான ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், அங்கித் திவாரிமீது தனியாக வழக்கு பதிவு செய்தஅமலாக்கத் துறை, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. இதற்காக திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பதுதொடர்பான விசாரணை, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “வழக்கை ரத்து செய்யக் கோரிஅங்கித் திவாரி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைப் பொருத்து, இந்த மனு மீது முடிவு எடுக்கலாம்” என்றார். அங்கித் திவாரியை விசாரிக்கவேண்டியுள்ளது என்றும், அமலாக்கத் துறை அதிகாரிகள் சிறைக்குச் சென்று அவரது வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ய அனுமதி கோருகின்றனர் என்றும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், “அங்கித் திவாரி வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொருத்து, இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிடலாம்” என்று உத்தரவிட்டனர்.
தூத்துக்குடியில் விண்வெளி பூங்கா: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 05:42:00
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில், தூத்துக்குடியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்பதின் பலனாய் கிடைத்தாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை எழுதிய ‘இந்தியா 75’ புத்தகத்தில், ‘தமிழகத்தில் விண்வெளிப்பூங்கா’ என்ற தலைப்பில் ‘‘தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பம் 2030-ன் தொடர் முயற்சியில் அந்த உச்சக்கட்ட அறிவியல் தொழில்நுட்பத்தையும் இணைக்க முடிந்தால், இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில்கூட தமிழகம் ஒரு முன்னணி இடத்தைப் பெற்று சிறக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார். மேலும், தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்துடன், அதன் அருகிலேயே சிறிய அளவிலான செயற்கைக் கோள்களையும் உருவாக்கும் நிலையத்தையும் ஏற்படுத்தினால், குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த நம்மால் முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான விண்வெளித் தளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது. உந்து சக்தி பூங்கா: இதையொட்டிய பகுதிகளில் விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2 ஆயிரம் ஏக்கரில் ஒரு விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு அளித்துள்ள விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: இந்த முன்முயற்சியைக் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். நம் தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்தையும், அதற்கு அருகிலேயே சிக்கனமான சிறிய ஏவுகலன்கள், செயற்கைக் கோள்களை உருவாக்கும் ஒரு நிலையத்தையும் உருவாக்கினால், உலகிலேயே மிகக் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் வாய்ப்பை நம்மால் பெற முடியும். இவ்வாறு ஏவுகலன்களுக்கான உதிரி பாகங்கள், எரிபொருள்களை உருவாக்கும் நிலையங்களினால் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படும். நமது தமிழ் மண்ணுக்குப் பெரும் வருவாயையும் கொண்டுவர முடியும். அந்தவகையில் தமிழகபட்ஜெட்டில் தூத்துக்குடியில் 2 ஆயிரம் ஏக்கரில் அறிவிக்கப்பட்டுள்ள விண்வெளி பூங்கா, ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்பதன் பலனாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு 2024-25-ம் ஆண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு @ வேளாண் பட்ஜெட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 05:38:00
சென்னை: சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல்செய்தார். அதில் கூறப்பட்டிருப்ப தாவது: 2024-25-ம் ஆண்டில் தரமானமரக்கன்றுகளை உற்பத்தி செய்தி டவும், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால்களை வலுப்படுத்துவதற்காகவும் சிறிய, பெரிய உயர் தொழில்நுட்ப நாற்றங்கால்கள் அமைப்பதற்கும் வேளாண் காடுகள் திட்டத்தில் ரூ.13 கோடி ஒதுக்கீடுசெய்யப்படும். 2024-25-ம் ஆண்டில் 14 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்வதற்காக, 2024-25-ம்ஆண்டில் ரூ.3 லட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.36 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.60 கோடி மதிப்பில் தேனீ முனையம் உருவாக்கப்படும். தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, விவசாயிகளுக்கு வழங்கிட அனைத்துக் கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2024-25-ம் ஆண்டில் இத்திட்டத் துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முக்கிய பயறு வகைகள்,எண்ணெய் வித்துகளில் பரப்பு விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு ரூ.108 கோடி ஒதுக்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தரமான விதைகளைத் தாங்களே உற்பத்தி செய்து, உயர் விளைச்சல் பெறும் நோக்கில், விதைக்கிராமத் திட்டத்தில் 15,810 மெட்ரிக் டன் விதைகள் 50 முதல் 60 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்படும். இதற்கென, 2024-25-ம் ஆண்டில் ரூ.35 கோடி மத்திய, மாநில அரசு நிதியில் ஒதுக்கீடு செய்யப்படும். முக்கிய வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறன் உயர்த்துதலை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட, ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ என்றபுதிய திட்டம் 15,280 வருவாய் கிரா மங்களில் செயல்படுத்தப்படும். 2024-25-ம் ஆண்டில் 100 இளைஞர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் கூடிய ஏதாவது ஒரு வேளாண்சார்ந்த தொழில் தொடங்குவதற்காகப் பட்டதாரிக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்காக, ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பலன் தரும் பருத்தி சாகுபடித் திட்டம் ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 2024-25-ம் ஆண்டில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் மேம்பாட்டுக்காக, ஆலை நிதி யிலிருந்து ரூ.12.40 கோடி செல விடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பும், எதிர்ப்பும்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 05:29:00
சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: மண்ணுயிர் காப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பது வரலாற்று சிறப்புமிக்கது. அதே நேரம், கரும்பு, நெல்லுக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: ‘ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர்’ புதிய திட்டம் 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்பது புதியமுயற்சியாகும். டெல்டா கால்வாய்கள் தூர்வார ரூ.110 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்கப்படும். 10 ஆயிரம்விவசாயிகளுக்கு தலா 2 மண்புழுஉரப் படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் போன்ற அறிவிப்புகள் இயற்கைவேளாண் மையை ஊக்கப்படுத்தும். காவிரி டெல்டா பாசன விவசாயசங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன்: மண்ணுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது பாராட்டுக்குரியது. 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் அறிவிப்புவரவேற்கத்தக்கது. இயந்திரமய மாக்கல், உயர்விளைச்சல் தரும் விதைகள் வழங்குதல் போன்றவை சிறப்புக்குரியவை. குறைந்தளவு பரப்பில் பயிர் பாதிக்கப்பட்டாலும் காப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மூலமாக அழுத்தம் கொடுத்து வருகிறோம். பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழக உழவர்களின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. ஏற்றத்துக்கு மாற்றாக ஏமாற்றத்தை மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கை வழங்கியுள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மண் வள அட்டையை பிரதமர் முன்னரே கொண்டுவந்துள்ளார். அதை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது தான் தமிழக அரசு அறிவிக்கிறது. பிரதமர் பல ஆண்டுகளாக ரசாயன உரத்தை பயன்படுத்த வேண்டாம் என கூறிவருகிறார். மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய பெயரை வைத்துபட்ஜெட்டை வெளியிட்டிருக் கின்றனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டானது உழவர்களின், உழவுத் தொழிலாளர்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ‘கடைமடைக்கும் பாசன நீர்’ என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் நிறைவேறா ஆசையாகவே உள்ளது. ரூ.10 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என்ற நம்பிக்கை டெல்டா விவசாயிகளிடம் துளியளவும் இல்லை. தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: வேளாண் தொழிலை வளர்ச்சி அடைய செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உழ வர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்கள் எதுவும் இல்லாமல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்: பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க முடியாததால் அங்குள்ளஇளைஞர்களுக்கு வேலைவாய்ப் புக்கு அரசின் திட்டம் என்ன? திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4 ஆயிரம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர். இதேபோல், வேளாண் பட் ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், வி.கே.சசிகலா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழக வேளாண் பட்ஜெட்டில் மண்வளம், இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம்: வேளாண் துறை செயலர் அபூர்வா தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 05:25:00
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து, பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து வேளாண் துறை செயலர் அபூர்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் அனைத்து பயிர்களையும் உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட்உருவாக்கப்பட்டுள்ளது. மண்வளம், ஊட்டச்சத்து பாதுகாப்பு, வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், நீராதாரங்களை வலுப்படுத்த திட்டங்கள் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கான, சர்க்கரை அளவு குறைந்த அரிசியான சீவன் சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் வகைகள் விற்பனையை ஊக்குவித்தல், ஆய்வு செய்தல் போன்ற எங்கள் திட்டங்களின் மூலம் மக்கள் நலனுக்கும் இந்த வேளாண் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வட்டாரத்துக்கு ஒருகிராமத்தில், உயிர்ம வேளாண்மை குறித்த மாதிரி பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். பிற மாநிலங்களில் பிரபலமான பயிர்களையும் இங்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். ஏற்கெனவே உழவர் சந்தைகள்உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் 100 உழவர் அங்காடிகள் திறப்பதாக அறிவித்துள்ளோம். இதில், வேளாண் உற்பத்தி பொருட்களை துறையே கொள்முதல் செய்து, ஒரு பொதுவான பெயரின் கீழ் நேரடியாகவும், இணையவழியாகவும் விற்பனை செய்ய உள்ளோம். புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ட்ரோன் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கான திட்டமும் உள்ளது. கரும்பு பயிரை பொறுத்தவரை, அதிகப்படியாக 111 டன் மகசூல்பெற்றுள்ளோம். சர்க்கரை ஆலைகளுக்கு புதிய இயந்திரங்கள், கரும்பு வெட்டும் இயந்திரங்கள் வாடகைக்கும், மானிய விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழகத்தில் கள் விற்பனைதொடர்பாக பிற துறைகளுடன் இணைந்து தமிழக அரசு கொள்கை முடிவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். உடன் வேளாண் துறை சிறப்புசெயலர் பொ.சங்கர், சர்க்கரைத்துறை ஆணையர் விஜயராஜ்குமார், வேளாண் ஆணையர் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர். கரும்பு சாகுபடி பரப்பு குறைவு: சர்க்கரைத் துறை ஆணையர் விஜயராஜ்குமார் கூறும்போது, “தமிழகத்தில் 3 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, ஒன்றரை லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. மத்திய அரசின் ரூ.2,919 ஆதார விலையுடன், ரூ.215 ஊக்கத்தொகை என ரூ.3,134 வழங்கப்படுகிறது. கரும்பின் பிழிதிறன் 9 சதவீதமாக இருந்தால் இந்த தொகை கிடைக்கும். வட மாவட்டங்களில் 11 சதவீதம் வரை பிழிதிறன் உள்ளது. அவ்வாறாகப் பார்க்கும்போது ஒவ்வொரு சதவீதத்துக்கும் ரூ.34 கூடுதலாக கிடைக்கும்” என்றார்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் விடுவிக்கக் கோரி அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 05:20:00
சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன்14-ம் தேதி அமலாக்கத் துறையினரால் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை கடந்த 16-ம்தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குற்றச்சாட்டுப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி விடுமுறையில் உள்ளதால், பொறுப்பு நீதிபதியான 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு அடிப்படை முகாந்திரமும் இல்லை என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். 22-வது முறையாக காவல் நீட்டிப்பு: இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 22-வது முறையாக மார்ச் 4 வரை நீட்டித்து நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
பயிர் சாகுபடியை அதிகரிக்க ரூ.773 கோடியில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் @ வேளாண் பட்ஜெட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 05:19:00
சென்னை: பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிர் சாகுபடியை அதிகரிக்க ரூ.773 கோடியில் நுண்ணீர்பாசன அமைப்புகள் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண் பட்ஜெட்டில் அவர் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் ரூ.773.23 கோடியில் 2.22லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்பாசன தானியங்கி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்படும். நீலம், பெங்களூரா, ருமானி, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்ற தென்னாட்டு மாம்பழரகங்களை கொண்டு 4,380 ஏக்கரிலும், இமாம் பசந்த், ரத்தினகிரி அல்போன்ஸோ, சிந்து போன்ற ரகங்களை கொண்டு 250 ஏக்கரிலும் புதிதாக மாந்தோப்புகள் உருவாக்கப்படும். குறிப்பாக 26,540 ஏக்கர் பரப்பிலான பழைய மாம்பழ தோட்டங்களை புதுப்பிக்க மானியம் வழங்கப்படும்.நடப்பாண்டில் மாம்பழத்துக்கான சிறப்புத்திட்டம் ரூ.27.48 கோடியிலும், வாழைக்கான சிறப்புத்திட்டம் ரூ.12.73 கோடியிலும் செயல்படுத்தப்படும். அந்தவகையில் மாம்பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க 6,175 ஏக்கருக்கு செயல் விளக்க திடல்கள் அமைக்கவும், குலை வாழைகள் காற்றில் விழுந்து சேதமடைவதைத் தடுக்க 3,700 ஏக்கரில் கழிவுகளை கொண்டு முட்டுக்கொடுத்தல் மேற்கொள்ளவும் மானியங்கள் வழங்கப்படும். விவசாய நிலங்களிலும், தென்னை நாற்றங்கால் மையங்களிலும் தென்னை செயல்விளக்கத் திடல்கள் அமைத்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.12.50 கோடி ஒதுக்கப்படும். பந்தல் காய்கறிகளை ஊக்குவிக்கும் விதமாக 770ஏக்கரில் ரூ.9.40 கோடியில் நிரந்தரப் பந்தல்அமைக்கும் திட்டம், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ரூ.3.67 கோடியில் 200 பண்ணை குட்டை கள் அமைக்கப்பட உள்ளன. தஞ்சையில் மருதம் பூங்கா: அதேபோல ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க 1,230 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்யப்படும். 1,680 ஏக்கரில் மூலிகை பயிர்களை சாகுபடி செய்வதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதுதவிர தலா ரூ.2 கோடி மதிப்பீட்டில் கன்னியாகுமரியில் முல்லைப் பூங்கா, தஞ்சாவூரில் மருதம் பூங்கா, கன்னியாகுமரியில் சூரியத் தோட்டம் மற்றும் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையமும், தென்காசி நடுவக்குறிச்சியில் புதிய அரசுத் தோட்டக்கலை பண்ணையும் அமைக்கப்பட உள்ளன. சிறு, குறு விவசாயிகளுக்காக பவர் டில்லர்களின் மானியம் ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுவதுடன், பவர்டில்லர்கள் 4 ஆயிரம் விவசாயி களுக்கும், பவர் வீடர்கள் 4,000 விவசாயிகளுக்கும் வழங்கப்படும். மேலும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் 26,179 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.32.90 கோடியில் 207 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவைக்கான செல்போன் செயலியும் ரூ.50 லட்சத்தில் உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பட்ஜெட்கள் மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 05:15:00
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கடந்த 19-ம் தேதி 2024-25 -ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்றுதாக்கல் செய்தார். 2024-25-ம்ஆண்டின் செலவுக்கான முன்பண மானிய கோரிக்கைள் மீதுவிவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாடு நிதி ஒதுக்கசட்ட முன்வடிவை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார். இந்த சட்ட முன்வடிவு நேற்றே ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டது. இதன்படி, அரசுக்கு துறைகள் வாரியாக கோரியநிதி வழங்கப்பட்டதாக, பேரவைத் தலைவர் அறிவித்தார். இதையடுத்து, இன்று பொதுமற்றும் வேளாண் பட்ஜெட் மீதுவிவாதம் நடைபெறுகிறது. விவாதத்துக்கு பதிலளித்து நிதியமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் நாளை உரையாற்றுகின் றனர். அத்துடன் அரசு தீர்மானங் கள், சட்ட முன்வடிவுகளும் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்: முதல்வரின் ‘மண்ணுயிர் காப்போம்' திட்டம் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-21 04:43:00
சென்னை: அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மண் வளத்தை காக்க முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம், பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ,1,775 கோடி, கரும்பு டன்னுக்கு ரூ.215 ஊக்கத் தொகை ஆகியவை அதில் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் நேற்று 4-வது ஆண்டாக வேளாண் பட்ஜெட்டை நேற்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நேற்று காலை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், 9.57 மணிக்கு முதல்வர் ஸ்டாலினுடன், பேரவை அரங்குக்குள் வந்தார். தொடர்ந்து, காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது: 2020-21ல் 1.52 கோடி ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 2022-23ல் 1.55 கோடி ஏக்கராக உயர்ந்தது. இதனால், உணவு தானிய உற்பத்தியும் 1 கோடியே 17 லட்சத்து 91 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. நீர்நிலைகளைத் தூர்வாரியும், புனரமைத்தும், சீரமைத்தும், புதிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியும், மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டது. மேலும், நுண்ணீர் பாசனம் போன்ற தொழில் நுட்ப பயன்பாட்டை அதிகரித்ததால், 2020-21ல் 89.06 லட்சம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற பயிர் பரப்பு, 2022-23-ல் 95.39 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கோடை மழை, தென்காசியில் மழைகுறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பரில் இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு ரூ.208.20 கோடி நிவாரணம், 2.74 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும். கடந்த 2022-23ம் ஆண்டில் 35.12 லட்சம் ஏக்கராக இருபோக சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இயற்கை இடர்பாடுகளுக்கு இடையிலும், 1.14 கோடி ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டில் 1.27 கோடி டன் உணவு தானிய உற்பத்தியை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மன்னுயிர் காப்போம் திட்டம்: மண் வளத்தை பேணவும், உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும், 'முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற புதிய திட்டம், வரும் நிதியாண்டில் 22 திட்டங்களுடன் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். இதில் குறிப்பாக, 2 லட்சம் விவசாயிகள் பயனடைய 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, முத்திரையிட்டு விற்பனை செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள், ரூ.5 கோடி மானிய நிதியில் செயல்படுத்தப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வரும் ஆண்டில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பயறு, துவரை, எண்ணெய் வித்து, எள், சூரிய காந்தி உள்ளிட்ட பயிர்களின் சாகுபடியில் தேவைக்கேற்ற உற்பத்தியை எட்ட ரூ.108 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்: விதைப்பு முதல்அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள், நிரந்தர பூச்சி கண்காணிப்பு திடல்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.65.30 கோடி ஒதுக்கப்படும். 2,482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் அமைக்க ரூ.2.48 கோடி, பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி ஒதுக்கப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து மீட்க, ரூ.1,775 கோடியில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஊக்கத்தொகை: சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப் பருவத்துக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு, அதிக சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பு ரக விதைகள் வழங்க ரூ.7.92 கோடி ஒதுக்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில், நுண்ணீர் பாசன அமைப்பை 2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மா, பலா, வாழை என முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.41.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செங்காந்தள், மருந்துக்கூர்க்கன், சென்னா, நித்திய கல்யாணி போன்ற மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். தமிழகத்தில் 26,179 விவசாயிகளுக்கு ரூ.170 கோடி நிதியில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும். விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை இனி விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.43 கோடி ஒதுக்கப்படும். கூட்டுறவுத்துறை: கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வட்டி மானியத்துக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆடு, மாடு, கோழி வளர்ப்போருக்கான முதலீட்டு கடன் வட்டி மானியத்துக்கு ரூ.200 கோடி, கூட்டுறவு வங்கி கணினிமயமாக்கத்துக்கு ரூ.141 கோடி ஒதுக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடியும், தமிழக அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்க ரூ.500 கோடியும் ஒதுக்கப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் 5,338 கிமீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் ரூ.110 கோடியில் தூர்வாரப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற இயற்கை வள மேம்பாட்டுப்பணிகளுக்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 23.51 லட்சம் வேளாண் பாசன இலவச மின் இணைப்புகளுக்கு, மின்கட்டண தொகையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ரூ.7,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையின் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.42,281 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். முக்கிய அம்சங்கள்
தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையால் தமிழக எல்லையில் போக்குவரத்து நெரிசல் @ ஓசூர்
கி.ஜெயகாந்தன்
ஓசூர்
2024-02-21 04:00:00
ஓசூர்: கனரக வாகனங்களின் உரிமம் தொடர்பான தணிக்கைக்காகத் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்குத் தமிழக நுழைவு வாயில் பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி உள்ளது. இவ்வழியாகத் தினசரி சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், விடுமுறை நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இவ்வழியாகச் சென்று வருகின்றன. வெளி மாநிலத்திலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் ஜுஜுவாடியில் உள்ள வட்டார போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு, வாகன உரிமம், சாலை வரி செலுத்திய விவரம் உள்ளிட்ட தகவல்களைத் தணிக்கை செய்வதோடு, உரிமம் இல்லாத வாகனங்களுக்குத் தற்காலிக உரிமம் வழங்கி வருகின்றனர். இத்தணிக்கைக்காக வாகனங் களை ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்துவதால், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி முதல் தமிழக எல்லையான ஜுஜுவாடி வரையில் வாகன நெரிசல் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல்வேறு பணிக்ச்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது: வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத் துக்கு உரிமம் இல்லாமல் வரும் வாகனங்கள் தற்காலிக உரிமத்தை தற்போது, ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் உரிமம் இல்லாமல் வருகின்றனர். இத்தணிக்கைக் காக ஜுஜுவாடி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், எல்லையில் தேவையற்ற வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இதைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் சிலர் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்று ஏமாற்றி வருகின்றனர். இப்பிரச்சினையை தடுக்க வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி உள்ள சர்வீஸ் சாலை வழியாக சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தையும் அனுமதித்து, தணிக்கைக்குப் பின்னர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை அனுமதிக்க வேண்டும். இதற்காக கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து தொடங்கும் ஜுஜுவாடி சர்வீஸ் சாலை வழியாக சரக்கு மற்றும் கனரக வாகனங்களை இயக்க வேண்டும். இதுதொடர்பான அறிவிப்புகளை தமிழக நுழைவு வாயில் பகுதியில் பன்மொழியில் அறிவிப்பு பலகை மூலம் ஓட்டுநர்கள் அறியும் வகையில் வைக்க வேண்டும்.இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் குறைவதோடு, தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது தடுக்கப்படும். எனவே, கனரக வாகனத் தணிக்கையை முறைப்படுத்தி, நெரிசலைச் சீர் செய்ய உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்களவைத் தேர்தல்: தமிழக - கர்நாடக எல்லைகளில் பாதுகாப்பு குறித்து மேட்டூரில் ஆலோசனை
வி.சீனிவாசன்
மேட்டூர்
2024-02-20 21:39:00
மேட்டூர்: வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து மேட்டூர் சார் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக - கர்நாடக காவல் துறையினர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தேர்தலை எதிர்கொள்வது குறித்து அரசியல் கட்சியினர் தற்பொழுது தெருமுனைப் பிரச்சாரம், ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் நிலையில், அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையம், வாக்குச்சாவடி அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்துக்கு உட்டபட்ட மேட்டூர் தொகுதியானது, தருமபுரி மக்களவைத் தொகுதியில் இணைந்துள்ளது. இந்நிலையில், விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், மாநில எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சேலம் எஸ்பி அருண் கபிலன் தலைமையில் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக கர்நாடகா காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜோஸ் பாதம், ஈரோடு ஏடிஎஸ்பி பாலமுருகன், கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை காவல் ஆய்வாளர் ஜெகதீஷ், கொள்ளேகால் கலால் ஆய்வாளர் விஜயலட்சுமி கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து எஸ்பி அருண் கபிலன் கூறியது: "மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடி சேலம் வருவாய் கோட்டத்துக்கும், ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் அடுத்த பகுதியில் தமிழக - கர்நாடகா எல்லையான பாலாற்றில் கர்நாடகா அரசு காவல்துறை, வனத்துறை, கலால் உள்ளிட்ட மூன்று துறைகளும் சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக - கர்நாடகா எல்லையான பாலாறு மற்றும் காரைக்காடு சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல கலால் பிரிவு அதிகாரிகள், உளவு பிரிவு அதிகாரிகளையும் பாதுகாப்பு மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரு மாநில எல்லையிலும் சட்ட விரோத கும்பல் உள்ளே நுழைவதை தடுத்து கண்காணிக்கவும், கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவில் மதுபான கடத்தலை தடுக்கவும், எல்லையோர பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கி பயன்பாடு அதிக அளவில் இருப்பதால் அதனை கண்காணிக்கவும், தேர்தல் நேரங்களில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது" என்று அவர் கூறினார்.
“தனி சின்னத்தில் போட்டியிடுவதே மதிமுக விருப்பம்” - துரை வைகோ
அ.அருள்தாசன்
திருநெல்வேலி
2024-02-20 21:17:00
திருநெல்வேலி: “தனி சின்னத்தில் போட்டியிடுவதே எங்கள் விருப்பம். தமிழகத்தில் எத்தனை தொகுதியில் போட்டி என்பதை முடிவு செய்த பின்னரே எந்தெந்த தொகுதி என்பதை அறிவிப்போம்” என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். திருநெல்வேலியில் மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியாக ரூ.2.5 கோடி ரொக்க பணம் மற்றும் காசோலைகளை துரை வைகோவிடம் வழங்கினர். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் முதற்கட்ட நிதியாக ரூ.35 லட்சத்தை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியது: “பல்வேறு சிறப்பம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை மதிமுக வரவேற்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மத்திய அரசின் குறுக்கீடு உள்ளிட்டவைகளை கடந்து தமிழக பட்ஜெட் சிறப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி பல திட்டங்களை செயல்படுத்தும் நிலை உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி வரை நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சவாலான இந்த நேரத்தில் சிறப்பான பட்ஜெட்டை தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்க்கட்சிகள் தவிர அனைவரும் பாராட்டி வருகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு, நிலுவைத் தொகை வராதது போன்றவை காரணமாகவே தமிழகத்தின் வருவாய் குறைந்துள்ளன. நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுக்குள்தான் உள்ளது. தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் 39 மக்களவை தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். விருதுநகர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளிலும் மதிமுக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். எண்ணிக்கை முடிவான பின்னரே தொகுதி குறித்து மதிமுக அறிவிப்பு வெளியிடும். விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பது மதிமுக தொண்டர்கள் விருப்பமாக உள்ளது. கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொருத்து வேட்பாளர்கள் அறிவிப்பு இருக்கும். மதிமுக பம்பரம் சின்னத்தை இழந்துவிட்டது. குறுகிய காலத்தில் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட்டு மக்களை சந்திக்க முடியாத நிலை இருந்ததால் மாற்று சின்னத்தில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டோம். தற்போது தனி சின்னத்தில் போட்டியிடுவதே எங்களது விருப்பம். இது குறித்து கூட்டணியும் கட்சித் தலைமையும் முடிவு செய்யும். இண்யா கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் மட்டுமே வெளியேறியுள்ளது. வலுவான நிலையிலேயே கூட்டணி உள்ளது. தொகுதி பங்கியீட்டை விரைவில் முடித்து இண்டியா கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். வாக்கு இயந்திரத்தை நம்பியே 370-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
“பாஜக தகிடுதத்தங்களுக்கு எச்சரிக்கை” - முதல்வர் ஸ்டாலின் @ சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு தீர்ப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 20:49:00
சென்னை: "2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேர்மைக்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்குமான இந்த வெற்றி, இந்திய ஜனநாயகத்தின் வலுவான செய்தியை எடுத்துரைப்பதோடு, பாஜகவின் தகிடுதத்தங்களுக்கு தக்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது" என்று சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது நீதிக்கும் இம்மண்ணின் சட்டத்துக்குமான ஒளிவிளக்காக அமைந்துள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 142-இன் கீழ் தனக்குள்ள அரிதினும் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், நியாயத்தை நிலைநாட்டியுள்ளதுடன் தேர்தல் அதிகாரியின் தில்லுமுல்லு செயலையும் உறுதியாக நிராகரித்துள்ளது. 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேர்மைக்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்குமான இந்த வெற்றி, இந்திய ஜனநாயகத்தின் வலுவான செய்தியை எடுத்துரைப்பதோடு, பாஜகவின் தகிடுதத்தங்களுக்குத் தக்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது" என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பின்புலம் என்ன? - சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு, தேர்தல் அதிகாரியால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை செல்லும் வாக்குகளாகக் கருதி மீண்டும் அனைத்து வாக்குகளையும் எண்ணி, அதன் அடிப்படையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை அறிவிக்குமாறு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு இண்டியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, “8 வாக்குச்சீட்டிலும் மனுதாரருக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்துள்ளது தெரிகிறது. ஆனால், வாக்குச்சீட்டை செல்லாததாகக் கருதும் நோக்கத்துக்காக தேர்தல் அதிகாரி அனில் மசிக் தனது பேனாவால் அதில் அடையாளம் வைத்துள்ளார். இதன் மூலம் தேர்தல் அதிகாரி சட்ட விதிகளை மீறியுள்ளார். மனுதாரருக்கு ஆதரவாக போடப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் அதிகாரி திட்டமிட்டு செயலிழக்க முயற்சித்துள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே, சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மசிக் குற்றவாளி. அவர் மீது வழக்குப் பதிய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விரிவாக வாசிக்க > சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - தேர்தல் அதிகாரி மீது வழக்குப் பதிய உத்தரவு
“நிறைவேறாத எதிர்பார்ப்புகளும், வரவேற்பும்...” - முத்தரசன் பட்டியல் @ வேளாண் பட்ஜெட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 18:34:00
சென்னை: “பரந்துபட்ட பிரிவினரின் கருத்துக்களையும், தேவைகளையும் கேட்டறிந்து ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இலக்கியச் சுவையுடன் அமைந்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” என அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (20.02.2024) சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நான்காவது வேளாண் நிதிநிலை அறிக்கையை (2024 - 25) சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் கூறப்பட்ட உறுதி மொழிகள், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள விபரங்களை நிதிநிலை அறிக்கை தெரிவித்துள்ளது. வரும் ஆண்டில் இயற்கை சார்ந்த சாகுபடிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்களை முன் வைத்துள்ளது. மண்ணுயிர் பாதுகாக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது ஆடா தொடா, நொச்சி, செங்காந்தள் உள்ளிட்ட மூலிகை செடிகள் வளர்ப்பில் கவனம் செலுத்தியுள்ளது. சிறு தானியங்கள் மற்றும் பருப்புவகைகள் உற்பத்திக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மண்புழு உற்பத்திக்கு மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. “ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர்” புதிய திட்டம் 15 ஆயிரத்து 280 கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்பது புதிய முயற்சியாகும். டெல்டா கால்வாய்கள் தூர்வார ரூ.110 கோடி ஒதுத்தப்பட்டுள்ளது. பாசனப் பரப்பளவு சுமார் ஒரு லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கூட்டுறவு பயிர் கடனாக ரூ 16 ஆயிரத்து 500 கோடி இலக்கு நிர்ணயித்து அதற்கு ரூ.700 கோடி வட்டி மானியம் வழங்குவதாக உறுதியளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 150 நாள் வேலை வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பேரிடர் காலங்களில் பேரிழப்புகளை சந்திக்கும் விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்ட உதவி முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகும். இது தொடர்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தவிர்த்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒப்பீட்டு அளவில் வேளாண் வணிகம், பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிலத் தொகுப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நிதி நிலை அறிக்கையில் ஏதும் இடம் பெறவில்லை. பரந்துபட்ட பிரிவினரின் கருத்துக்களையும், தேவைகளையும் கேட்டறிந்து ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இலக்கிய சுவையுடன் அமைந்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தலைமைச் செயலராக சரத் சவுகான் பதவியேற்பு - திருப்பதி லட்டு தந்து வரவேற்பு
செ. ஞானபிரகாஷ்
புதுச்சேரி
2024-02-20 17:46:00
புதுச்சேரி: புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக சரத் சவுகான் பதவியேற்றார். புதுச்சேரி மக்கள், அரசுடன் இணைந்து செயல்படுவேன் என்று முதல்வர், பேரவைத் தலைவர் சந்திப்புக்கு பிறகு அவர் குறிப்பிட்டார். புதுவை மாநில தலைமை செயலாளராக ராஜீவ்வர்மா இருந்தார். இவர் தன்னிச்சையாக செயல்படுவதாக ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் தலைமை செயலரின் செயல்பாடுகளை எம்எல்ஏக்கள் கடுமையாக விமர்சித்தனர். அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசு செயலர் இட மாற்றத்தில் முதல்வர் ரங்கசாமியை தலைமைச் செயலாளர் ராஜீவ்வர்மா கலந்து ஆலோசிக்கவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது. தலைமைச் செயலாளரை மாற்ற முதல்வர் தரப்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து புதுவை தலைமைச்செயலாளர் மாற்றப்பட்டார். அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரி சரத் சவுகான் புதுவை மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். புதுச்சேரிக்கு இன்று வந்த, சரத்சவுகான் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். புதிய தலைமை செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு செயலாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வந்த தலைமைச்செயலாளர் சரத் சவுகான், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து சால்வை அணிவித்தார். இது பாரம்பரிய வழக்கம் என்று குறிப்பிட்டார். பின்னர் இருவரும் சிறிது உரையாடினர். திருப்பதி லட்டு தந்து வரவேற்பு: பின்னர் பேரவைத் தலைவர் செல்வத்தை சந்தித்தார். அப்போது, "புதுச்சேரி அரசுக்கும் மக்களுக்கும் ஒத்துழைப்பு தாருங்கள்" என்று தலைமைச் செயலாளரிடம் பேரவைத் தலைவர் குறிப்பிட்டார். அவரிடம் திருப்பதியில் இருந்து வந்த லட்டு பிரசாதத்தை தந்தார். அதை வணங்கி ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தலைமைச்செயலாளர் சரத் சவுகான் கூறுகையில், "புதுவை மக்களின் நலனுக்காக பாடுபடுவேன், சிறந்த நிலையிலுள்ள புதுச்சேரியில், சுகாதாரம், கல்வி, மாநிலத்தின் சமூக நல மேம்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் இங்கு கல்வித்திறனில் சிறந்துள்ளனர். புதுவை மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை நலனுக்காக பாடுபடுவேன். புதுச்சேரி மக்கள் மற்றும் அரசுடன் இணைந்து செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.
ப்ரீமியம் வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ் முதல் த்ரிஷா கொந்தளிப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.20, 2024
செய்திப்பிரிவு
அம்சங்கள்
2024-02-20 17:44:00
தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு; கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தேர்வு செய்யப்பட்ட 2482 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படுத்திட ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு; பயிர் உற்பத்தித் திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டதுக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு... இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்: தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள் தடையற்ற வாசிப்பனுபவம் உங்களின் உறுதுணைக்கு நன்றி !
முதல்வர் ஸ்டாலினை சந்திக்க புறப்பட்ட மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தம் @ செய்யாறு
இரா.தினேஷ்குமார்
திருவண்ணாமலை
2024-02-20 17:40:00
திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று (பிப். 20) மனு கொடுக்கச் செல்ல முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மேல்மா சிப்காட் திட்ட எதிர்ப்பு இயக்க விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 3-ம் கட்ட சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு (மேல்மா சிப்காட்) 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டுகிறது. இதற்கு 9 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முப்போகம் விளையக்கூடிய விளை நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாய இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில் கடந்த 7 மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இதற்கு பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்பபு தெரிவித்தது. இதன் எதிரொலியாக விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர். தமிழக சட்டப்பேரவையில் குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “9 ஊராட்சிகளில் 2 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கு நிலம் கிடையாது” என கருத்து தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள், தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். விவசாய நிலத்தில் இறங்கி பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நிலம் இருப்பதை உறுதி செய்தால், அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலு விலக தயாரா என கேள்வி எழுப்பினர். மேலும், வடஆளப்பிறந்தான் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் உருவபொம்மையை எரித்து முழக்கமிட்டனர். இதன்தொடர்ச்சியாக, “குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிலம் இல்லை; கைது செய்யப்பட்டவர்கள் நிலமற்றவர்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த பொய்யான கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்கக் கோரியும், தொடர்ந்து போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியும், மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தி” சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க, செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் இருந்து இன்று (பிப்.20) விவசாயிகள் புறப்பட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதை காரணமாக எடுத்துரைத்து, சென்னை செல்வதை அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்புக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக கண்டன முழக்கமிடப்பட்டன. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி, போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
‘மணல் கொள்ளை’ ஆட்சியில் ‘மண்ணுயிர் காப்போம்’ திட்டமா? - ஓபிஎஸ் விமர்சனம் @ வேளாண் பட்ஜெட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 17:35:00
சென்னை: "தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையினால் விவசாயிகளுக்கு எவ்விதமான பயனும் இல்லை. விவசாயிகளின் நலன்களைப் பூர்த்தி செய்யாத அறிக்கையாக வேளாண் நிதிநிலை அறிக்கை விளங்குகிறது" என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உணவு தந்துதவும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண்மை நிதி நிலை அறிக்கை அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், இன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்ற பெருமையைத் தவிர, இந்த நிதிநிலை அறிக்கையால் பயனேதும் இல்லை என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இது குறித்து எவ்விதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை மரத்திலிருந்து 'நீரா' போன்ற பதநீர் இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது தென்னை விவசாயிகளிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றிற்கு 4,000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே. கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மண் மண் வளமே அழியும் அளவுக்கு மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது. இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024-2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்திற்காக, சென்ற ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2,337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 562 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிலை வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் எடுத்துரைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு அரசு சார்பில் செய்யப்படாததால், அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கான இழப்பீட்டினை வழங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும். சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழக விவசாயிகளின் இயற்கை உரத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தி.மு.க அரசு தெளிவுபடுத்த வேண்டும். மொத்தத்தில், இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையினால் விவசாயிகளுக்கு எவ்விதமான பயனும் இல்லை. விவசாயிகளின் நலன்களைப் பூர்த்தி செய்யாத அறிக்கையாக வேளாண் நிதிநிலை அறிக்கை விளங்குகிறது” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
“அனைத்து மாவட்ட விவசாயிகளையும் உள்ளடக்கிய பட்ஜெட் இது” - ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா விளக்கம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 17:10:00
சென்னை: "அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கிய பட்ஜெட்தான் எங்கள் நோக்கமே" என்று தமிழக வேளாண் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா விளக்கம் அளித்துள்ளார். தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து வேளாண் துறை முதன்மை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், "அனைத்து விவசாயிகளையும் அனைத்து பயிர்களையும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியது இந்த பட்ஜெட். அனைத்து மாவட்டத்துக்கும் ஒவ்வொரு திட்டத்தை கொடுத்துள்ளோம். மண் வளத்தை பேணி காப்பது என்பது இந்த பட்ஜெட்டின் முக்கியமான கான்செப்ட். மண் வளத்தை காப்பாற்றினால்தான் ஊட்டச்சத்து மிக்க விளைபொருட்கள் கிடைக்கும். தற்போதைய சூழலில் பணியாட்கள் பற்றாக்குறை இருப்பதால், வேளாண் பணிகளை இயந்திரமாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். விளைபொருட்களை மதிப்புக்கூட்டி புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுத்துள்ளோம். மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரை, இதுதான் இந்த பட்ஜெட்டில் அடிப்படை. கரும்பு ஆலைகளை பொறுத்தவரை கடந்த வருடம் பெரும்பாலும் லாபத்துடன் இயங்கின. கரும்பு விவசாயிகளுக்கும் இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூடப்பட்டு வரும் கரும்பு ஆலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு வெட்டுவதற்கு இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன. கரும்பு விவசாயத்தை பொறுத்தவரை காலநிலை மாற்றத்தை விளைச்சலும், வருவாய் கிடைக்கும். தருமபுரி போன்ற சில மாவட்டங்களில் பேரீச்சை பயிரிட்டுள்ளார்கள். அது போன்றவர்களை ஊக்கப்படுத்தவே பட்ஜெட்டில் பேரீட்சை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.208 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த அரசாணை இன்றைக்குள் வெளியாகிவிடும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய 100 உழவர் அங்காடிகள் திறக்கப்படவுள்ளன. இந்த உழவர் அங்காடியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை வேளாண் துறை மூலம் வாங்கி வந்து விற்கப்படும்" என்று அவர் விளக்கமளித்தார். | வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2024 அம்சங்கள்: 100 உழவர் அங்காடிகள் முதல் கரும்புக்கு ரூ.215 ஊக்கத்தொகை வரை
தனியார் கட்டுமான நிறுவனம் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் தடை
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-20 17:05:00
சென்னை: தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓசேன் லைஃப் ஸ்பேஷஸ் (OCEAN LIFE SPACES) நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை ஸ்ரீராம், எஸ்.கே பீட்டரிடம் கேட்டதாகவும் இதற்கு எஸ்.கே பீட்டர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து எஸ்.கே. பீட்டர் மீது, ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி வரை பணபரிமாற்றம் நடத்ததாக புகார் எழுந்த நிலையில், இதை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என அமலாக்கத் துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவன அதிபர் எஸ் கே பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதனடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டருக்கும் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து பீட்டர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது தவறு. மேலும், தன் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
“விவசாயிகளுக்கு ஏற்றம் அல்ல... ஏமாற்றம்!” - ராமதாஸ் பட்டியல் @ வேளாண் பட்ஜெட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 17:01:00
சென்னை: "விசாயிகளுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் வேளாண் நிதிநிலை அறிக்கை அறிமுகம் செய்யப்பட்டது; ஆனால், ஏற்றத்துக்கு மாற்றாக ஏமாற்றத்தை மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கை வழங்கியுள்ளது" என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் வேளாண் நிதிநிலை அறிக்கை அறிமுகம் செய்யப்பட்டது; ஆனால், ஏற்றத்துக்கு மாற்றாக ஏமாற்றத்தை மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கை வழங்கியுள்ளது. 2024- 25-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் முதன்மையாக எதிர்பார்த்தது வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்பட வேண்டும் என்பதைத் தான். ஆனால், அந்த எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேறவில்லை. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்கப்பட வேண்டும் என்பது தான் விவசாயிகலின் கோரிக்கை. ஆனால், மத்திய அரசு வழங்கும் விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.100, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.75 வீதம் ஊக்கத்தொகை வழங்குவதுதன் தமிழக அரசு அதன் கடமையை முடித்துக் கொள்கிறது. அதனால் நெல்லுக்கு குவிண்டாலுக்கு அதிக அளவாக ரூ.2303 மட்டுமே கிடைக்கிறது. இது போதாது. கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பது அடுத்த கோரிக்கை. ஆனால், மத்திய அரசு தமிழகத்தில் விளையும் கரும்புகளுக்கான கொள்முதல் விலையாக ரூ.2919 மட்டுமே அறிவித்துள்ளது. தமிழக அரசு நினைத்திருந்தால் குறைந்தது ரூ.1000 ஊக்கத்தொகை சேர்த்து டன்னுக்கு ரூ.4000 பரிந்துரை விலையாக அறிவித்திருக்கலாம். அதை சர்க்கரை ஆலைகளே வழங்கியிருக்கும். அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருக்காது. ஆனால், தமிழக அரசோ, நடைபெற்று முடிந்த பருவத்திற்கு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், டன்னுக்கு ரூ.3134 மட்டுமே கிடைக்கும். இதைக் கொண்டு செலவை கூட ஈடுசெய்ய முடியாது. தமிழகத்தில் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது திமுக வலியுறுத்தி வந்தது. ஆனால், ஆளுங்கட்சியாக வந்தவுடன் அந்த வாக்குறுதியை வசதியாக காற்றில் பறக்கவிட்டு விட்டது. கொப்பரைத் தேங்காய், நிலக்கடலை ஆகியவற்றுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்து விட்ட நிலையில், விவசாயிகளின் நலன் கருதி நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு அதிக செலவு ஆகாது. ஆனாலும், விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாததால் அந்தத் திட்டத்தை நடப்பு நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிக்கவில்லை. குறுவை பருவத்தில் மேட்டூர் அணையிலிருந்து போதிய அளவில் தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் முழுமையாக கருகி விட்டன. ஒன்றரை லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல், சம்பா/தாளடி பருவத்திலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் பல லட்சம் ஏக்கரில் விளைச்சல் குறைந்தது. இப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. விவசாயிகலின் வருவாயைப் பெருக்கவோ, பாசனப் பரப்பை அதிகரிக்கவோ எந்த திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. பண்ருட்டியில் பலா மதிப்புக்கூட்டு மையம் அமைக்கப் படும் என்று 2021 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில், நடப்பாண்டிலும் அதே அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான விவசாயிகள் அங்காடிகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கான சிறப்பு வேளாண் கிராமங்கள், புதிய பயிர்வகைகளை பயிரிடச் செய்வதற்கான ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவை. ஆனால், விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கான பெருந்திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதன் நோக்கமே அத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தான். ஆனால், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவே இல்லை. 2024- 25ஆம் ஆண்டில் கூட வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.11,194 கோடியாகவே உள்ளது. நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் வேளாண்துறை மானியக் கோரிக்கையை வேளாண் நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்வதால் எந்த பயனும் இல்லை. கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசாணைகள் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளனவே தவிர ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது தமிழகத்திற்கு புதியது. அதனால், முதல் 3 நிதிநிலை அறிக்கைகளில் தடுமாற்றங்கள் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நான்காவது அறிக்கையும் பயனற்ற ஆவணமாக இருப்பது விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழக அரசு தோற்று விட்டதையே காட்டுகிறது” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். | வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2024 அம்சங்கள்: 100 உழவர் அங்காடிகள் முதல் கரும்புக்கு ரூ.215 ஊக்கத்தொகை வரை
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 அம்சங்கள்: 100 உழவர் அங்காடிகள் முதல் கரும்புக்கு ரூ.215 ஊக்கத்தொகை வரை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 16:42:00
சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ரூ. 42,282 கோடி மொத்த நிதி ஒதுக்கீடு கொண்ட இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் முழுமையாக... > ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிட கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தேர்வு செய்யப்பட்ட 2482 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படுத்திட ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு . பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டம் - ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு: > ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர் - விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துத் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கங்கள், நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைத்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். > ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு வேளாண் மேம்பாட்டு பயிற்சிகள்: பணித்திறனையும், தொழில்நுட்ப அறிவினையும் மேம்படுத்தி, வேளாண் மேம்பாட்டினை எய்தும் வண்ணம் விவசாயிகளுக்கும், படித்த இளைஞர்களுக்கும், அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் வழங்கிட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செங்கல்ராயன், வேலூர், செய்யாறு, அறிஞர் அண்ணா, பெரம்பலூர், தர்மபுரி, எம்.ஆர்.கே ஆகிய சர்க்கரை ஆலைகளில் நீர் சுத்திகரிப்பு நிலைய அயனி மற்றும் எதிர் அயனி பரிமாற்றி நிறுவிட ரூ.1.39 கோடி. முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்திட ரூ.41.35 கோடி ஒதுக்கீடு. குளிர் மண்டலப் பழப்பயிர்களான பிளம்ஸ், பேரிக்காய் ஆகியவற்றின் தோட்டங்களைப் புதுப்பித்தல், உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரித்திட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு. ஐந்திணை நிலங்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்த முல்லை, மருத நிலப்பூங்காக்கள், கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம், தென்காசி-நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைப்பதற்காகவும், உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்யவும் ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு. தொகுப்புமுறை சாகுபடி: மல்லிகை, பலா, மிளகாய், கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைப் பயிர்களில் தொகுப்புமுறை சாகுபடியினை ஊக்குவிக்க தோட்டக்கலை வல்லுநர்களால் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். > அனைத்து வட்டார அலுவலகங்களிலும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான திட்டங்கள் சாகுபடித் தொழில்நுட்பங்கள் போன்ற தகவல்களை, விவசாயிகள் எளிதில் அறியும் வண்ணம் தகவல் மையம் அமைக்கப்படும். > பருவமில்லா காலங்களிலும் முருங்கை உற்பத்தியினை ஊக்குவிக்க முதற்கட்டமாக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நெகிழி விரிப்பான் கொண்டு முருங்கை மரத்தினை மூடும் தொழில்நுட்பம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு மழை நீர் சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மைப் பொறியியல் துறையும், வேளாண் அறிவியல் நிலையங்களும் இணைந்து விவசாயிகளுக்கு மழை நீர் சேகரிப்பு முறைகள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைப் பராமரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு. வேளாண் கண்காட்சிகள்: விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9 கோடி செலவில் மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும். தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை: பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.43 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு வேளாண் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEX) என்ற தனி அமைப்பின் மூலம், தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முதன்மை பதப்படுத்தும் மையங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடங்கள் அரிசி, மா, வாழை, கொய்யா, தக்காளி, மிளகாய் போன்ற வேளாண் விளைபொருட்களுக்கும், கடல் சார் மீன் பொருட்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய மதிப்புச் சங்கிலிகள் உருவாக்குதல் என, TNAPEX இன் திட்டங்கள் மொத்தம் ரூ. 72 கோடியில் செயல்படுத்தப்படும். நீர்வளத்துறை: தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் தூர்வாருவதற்கு ரூ 110 கோடியில், 919 பணிகள். கால்நடை பராமரிப்பு: பசுந்தீவன ஊடுபயிர் செய்து பால் உற்பத்தியை உயர்த்திட 5,000 ஏக்கர் பரப்பிற்கு ரூ. 2 கோடி மானியம். மீன்வளம்: மீன்வளர்ப்போரின் வருவாய் உயர்வதுடன், உள்நாட்டு மீன் உற்பத்தியும் அதிகரித்திட புதிதாக நன்னீர் மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல், இடுபொருள் மானியம், மீன்தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம். ஊரக வளர்ச்சி: இயற்கைவள மேம்பாட்டுப்பணிகள்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பண்ணைக்குட்டைகள், நீர் செறிவூட்டுத் தண்டுகள், அமிழ்நீர் குட்டை, கசிவு நீர் குட்டை, செறிவூட்டு கிணறுகள், புதிய குளங்கள், மண் வரப்பு, கல் வரப்பு போன்ற இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு. தென்னை நாற்றுப்பண்ணைகள்: தோட்டக்கலைத்துறையின் ஒருங்கிணைபில் ஆர்வமுள்ள, பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு. விதை உற்பத்தி தொகுப்புகள்: பயறு வகைகள், எண்ணெய்வித்துகளில், 100 விதை உற்பத்தித் தொகுப்புகள் அமைத்து, பயிற்சியுடன் விதை உற்பத்தி செய்திட பண்ணை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி மானியம். எரிசக்தித் துறை: 23.51 இலட்சம் வேளாண் பாசன இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரக் கட்டணத் தொகையாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ. 7,280 கோடி நிதி ஒதுக்கீடு. பனை பொருள் வளர்ச்சி: பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 10 இலட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்படும்; 200 பனைத்தொழிலாளர்களுக்கு, மதிப்புக் கூட்டுப் பொருட்கள் பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலைப்பொருட்கள் பயிற்சியும், உரிய கருவிகளும் ரூ. 1.14 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும். மொத்த நிதி ஒதுக்கீடு - ரூ. 42,281.88 கோடி
“விவசாயிகளுக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகள்” - பட்டியலிட்டு வைகோ பாராட்டு @ வேளாண் பட்ஜெட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 15:47:00
சென்னை: “இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கை” என தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “2024-25 நிதியாண்டுக்கான வேளாண் வரவு செலவுத் திட்டத்திற்கு 42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 2020-21-ல் 152 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 2022-23-ல் 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட போதிலும், இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்கு, 380 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட, 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 4,436 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்வளத்தைப் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும், முதல்மைச்சரின் மண்ணுயிர் காத்து, ‘மண்ணுயிர் காப்போம் திட்டம்' என்ற புதிய திட்டம் 22 இனங்களுடன் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளை மகிழ்விக்கும். ரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து, மண்ணின் வளம் காக்க 6 கோடியே 27 லட்சம் ரூபாய் மத்திய - மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்படுத்த 7 கோடியே 50 லட்சம் ரூபாயும், 37,000 ஏக்கர் அமிர நிலங்களைச் சீர்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும். இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு 10 லட்சம் ஏக்கரில் பயிர் இடுவதற்காக 5 லட்சம் லிட்டர் உயிர் உரங்கள், 7 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் வழங்கப்படும். வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும். 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம், வேளாண் காடுகள் திட்டம்' மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும். இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்காக மட்டும் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு, சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீன்ம்பூர் சீரக சம்பா, அய்யம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதிபாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓட்டைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி தருகிறது. முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.41.35 கோடி ஒதுக்கீடு, நடப்பாண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது. ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும். நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு, கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும். புதிய அறிவிப்புகள் விவசாயிகளுக்கு ஊக்கத்தை அளிக்கும், உழவர் சந்தையை போன்று தரமான வேளாண் பொருட்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய ரூ.5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும். விவசாயிகள் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீடு திட்டம் 1,775 கோடியில் செயல்படுத்தப்படும். பொருளீட்டுக் கடன் வரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் தகுதியுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.16,500 கோடி வழங்க இலக்கு, உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
“மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரை” - வேளாண் பட்ஜெட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 15:15:00
சென்னை: “உழவர்கள் வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம். திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது. மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள வேளாண் மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பாராட்டுகிறேன்” என்று வேளாண் பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், "திமுக ஆட்சி அமைந்தால் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தோம். சொன்னதைச் செய்து காட்டும் இந்த அரசானது, ஆட்சிக்கு வந்த உடனேயே வேளாண் அறிக்கையைத் தயாரித்துத் தாக்கல் செய்தது. தாக்கல் செய்த அறிக்கையின்படி செயல்பட்டது. இதன் மூலமாகத் தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு அதிகமானது. விளைச்சல் அதிகமானது. உற்பத்தியான பொருளுக்கு நல்ல விலை கிடைத்தது. உழவர் பெருமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடையும் வகையில் பலனைப் பெற்றார்கள். மண்ணும் செழித்தது. மக்களும் செழித்தார்கள். இதனைக் கண் முன்னால் கண்டு வருகிறோம். இந்த வரிசையில் நான்காவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இரண்டு மணிநேரம் அவரால் வாசிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையானது இயற்கை வளத்தை மேம்படுத்திக் காட்டும் ஈடு இணையற்ற அறிக்கையாக அமைந்துள்ளது. வேளாண்மையை உணவுத் தேவைக்காக மட்டுமோ, அல்லது அதனைத் தொழிலாக மட்டுமோ கருதுபவர்கள் அல்ல நாம். நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்ததுதான் வேளாண்மையாகும். அதனால்தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கடமை நமக்கு உண்டு. மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல நிலத்துக்கும், மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த நம் முன்னோர் வழியில் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு அழுத்தமான சாட்சியமாக இந்த ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மண் வளம் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளையும் ஊக்கப்படுத்திட 'முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' அமைந்துள்ளது. ராசயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணியிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குறைந்து வருகிறது. எனவே மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. ரசாயன உரங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெற்பயிரில் ரசாயன மருந்துகளைக் குறைத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது 2,400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை உயர்த்தப் போகிறது. மரபுசார் நெல் ரகங்களை ஊக்குவிக்கப் போகிறோம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் ரகம் அதிகம் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களின் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. வேளாண் இயந்திரங்கள் வாடகைக்குக் கிடைக்கும் மையங்களை உருவாக்க இருக்கிறோம். இயற்கைச் சீற்றங்களால் உழவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்களை மீட்கப் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்கு மட்டும் 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ என்ற திட்டம் 15 ஆயிரத்து 280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. பத்து ஆண்டுகளாகப் பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை திமுக அரசு வழங்கி உள்ளது. இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம். நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தொழில் துறை சார்பில் நடைபெறுவதைப் போல வேளாண்மைத் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா, சங்கமம் போன்றவற்றை நடத்தி வேளாண்மை மீதான ஆர்வத்தைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. 'உழவர்கள்' மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை. தொழில் துறையைப் போல அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம். கலைஞர் நூற்றாண்டு விழா மலர்க் கண்காட்சியானது சென்னையில் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அதனைப் பார்த்து வருகிறார்கள். இவை போன்ற முயற்சிகள், வேளாண்மையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செலுத்தும். மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள வேளாண் மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பாராட்டுகிறேன். துறை அதிகாரிகள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பாஜக அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப் போராடினார்கள் உழவர்கள். அவர்களது எதிர்ப்பினால் பின்வாங்கியது பாஜக அரசு. இப்போது மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அவர்கள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது. உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பாஜக அரசு உள்ளது. அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாக திமுக அரசு உள்ளது. இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்த உச்ச நீதிமன்ற ஆலோசனை நியாயமற்றது: கே.பாலகிருஷ்ணன்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 14:56:00
சென்னை: "மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கடும் எதிர்ப்பையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்த பிறகும், தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட்டை இயக்க அனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒப்புக்கொள்ளும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனையை முன்வைத்திருப்பது நியாயமற்றது" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்.14 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் குறித்த வழக்கில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை. தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட்டை இயக்க அனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒத்துக்கொள்ளும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கடும் எதிர்ப்பையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்த பிறகும், உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட ஆலோசனையை முன்வைத்திருப்பது நியாயமற்றது. ஸ்டெர்லைட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஓராண்டு காலம் நடத்திய போராட்டத்தின் உச்சகட்டத்தில், அமைதியாக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உச்சநீதிமன்றத்தின் கருத்து இவ்வுயிரிழப்புகளையும், படுகாயம் அடைந்த மக்களின் வலிகளையும், வேதனைகளையும் புறந்தள்ளுவதாகும். தேசத்தின் நலன், தாமிர உற்பத்தியின் தேவை ஆகியவை குறித்து உச்சநீதிமன்றத்தின் கவலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை எவ்வித சட்டதிட்டத்தையும் மதிப்பதில்லை என்பது வரலாறு. ஸ்டெர்லைட் ஆலை துவக்குவது சம்பந்தமான அறிவிப்பு வந்ததிலிருந்தே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், குறைந்தபட்சம் பசுமை வளையத்துக்கான மரங்களை நடுவதற்கு கூட கால் நூற்றாண்டுகளாக மறுத்தே வந்த நிறுவனம் அது. 15 உயிர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு அவ்வளவு பெரிய மக்கள் திரள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம், அந்த நிறுவனம் அரசு அமைப்புகளை தன்வயப்படுத்திக் கொண்டு அதன் காரணமாக தனது சட்டமீறல்களை தொடர்ந்ததே ஆகும். 2010 ஆம் ஆண்டு அந்த ஆலை மூடப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், ஒருநாள் கூட உற்பத்தியை நிறுத்தாமல் உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்ற பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மூர்க்கத்தனம் அதிகமானது. அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை இது மாவட்ட நிர்வாகத்தின் பிரமாணப் பத்திரமா? ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பிரமாணப் பத்திரமா? என்று கேட்கும் அளவுக்கு சென்றது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும், உயர்நீதிமன்றம் மூட வேண்டுமென்று ஆணையிட்ட பிறகும், பொதுமக்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருந்தபோதும், ‘காப்பர் ஸ்லாக்’ எனப்படும் நச்சுக் கழிவுகளை எவ்வித தடையுமின்றி நீர்நிலைகளில் கொட்டி, நிலத்தையும் நீரையும் பாழாக்கிய அளவுக்கு சட்டத்தை மதிக்காதவர்கள். இது தவிர, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு நாட்டுக்கு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளனர். தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று ஆகியவற்றை தொடர்ச்சியாக மாசுப்படுத்தி வந்தபோதும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் எதையும் காது கொடுத்து கேட்காத நிறுவனம் ஸ்டெர்லைட். இந்தப் பின்னணியில், நிபுணர் குழுவின் அறிக்கையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் அடாவடித்தனத்தை மீண்டும் தொடங்குவார்கள். எனவே, உச்ச நீதிமன்றம் இந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென்றும், தமிழக அரசு இந்த ஆலோசனையை நிராகரிப்பதுடன் இதுவரையிலும் எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கு வாபஸ்
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-20 14:51:00
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக நானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்ந்தெடுக்கபட்டோம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணை கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கபட்டனர். சட்டமன்ற கட்சியின் செயலாளராக அன்பழகன் மற்றும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கபட்டனர். 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டு, ஜூலை 17-ல் கட்சியின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமார், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ண்மூர்த்தியை நியமித்து சபாநாயருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். 5 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையின் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் முறையிட்டோம். அது தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களுடன் அமர்ந்து இருப்பதால், விவாதங்களின் போது அதிமுகவினரால் திறமையாக செயல்பட முடியவில்லை. எனவே, கட்சியில் இருந்து சட்டமன்ற பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கபட்டவர்களை அங்கீகரிக்க, சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மனுவை திரும்பெற அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை திரும்பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
“திறமையாக கையாண்டது வரவேற்கத்தக்கது” - செல்வப்பெருந்தகை கருத்து @ வேளாண் பட்ஜெட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 14:23:00
சென்னை: “மத்திய அரசு புறக்கணித்தாலும், நிதி நிலைமை மிக மோசமாக இருந்த போதிலும் திறமையாக கையாண்டு இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. மீண்டும் விவசாயிகளின் கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தும்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, “மத்திய அரசு புறக்கணித்தாலும், நிதி நிலைமை மிக மோசமாக இருந்த போதிலும், திறமையாகக் கையாண்டு இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. மீண்டும் விவசாயிகளின் கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தும். தேர்தலுக்குப் பிறகு முழுமையான பட்ஜெட்டின் மீது வாதம் நடைபெறும். இந்த விவாதத்தின்போது காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், பதில் உரையில் வேளாண்மை துறை அமைச்சர், இவை அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக கூறியிருக்கிறார். மத்திய அரசை கண்டித்து இந்தியா முழுவதும் வேளாண் குடிமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வேளாண் குடிமக்களை வஞ்சிக்கிறது. மூன்று புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வந்து, வாதம் நடத்தாமல் எதிர்க்கட்சிகளைக் கூட கேட்காமல் இரவோடு இரவாக நிறைவேற்றினார்கள். விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு, ஒரு வருடம் போராடினார்கள். சுதந்திரப் போராட்டத்தில் எப்படி உயிர்களை பலி கொடுத்தார்களோ, அப்படி இந்த போராட்டத்திலும் பலி கொடுத்தார்கள். ஆனால் மோடி அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. அமைச்சரின் மகனே காரையேற்றி கொலை செய்யும் அளவுக்கு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சேதாரம் விவசாயிகளுக்கு தான். மத்திய அரசு மாநில அரசுகளை வஞ்சிக்கிறது. மத்திய அரசு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் தாராளமாக நிதி வழங்க வேண்டும்" என்றார்.
“பலன் தரும் திட்டம் இல்லாததால் விவசாயிகளுக்கு ஏமாற்றம்” - இபிஎஸ் @ வேளாண் பட்ஜெட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 14:09:00
சென்னை: "வேளாண் பட்ஜெட்டை பொறுத்தவரைக்கும் விவசாயிகளுக்கு பலனில்லை. திட்டம் எதுவும் இல்லை. வேளாண் கல்லூரி சார்ந்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட் இது" என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுகவின் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதுவரை வழங்கவில்லை. அதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.215 வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியால் டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு ஏதும் அறிவிக்கப்படவில்லை. இது மிகவும் வேதனைக்குரியது. டெல்டா மாவட்டத்தில் சம்பா பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தென் மாவட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீர் செய்து கொடுக்க வேண்டும். இன்றைய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த வேளாண் அமைச்சரின் சொந்த தொகுதியில் இருக்கிற கூட்டுறவு சக்கரை ஆலையை முழுமையாக இயக்காத அரசுதான் திமுக அரசு. இயற்கை விவசாயத்துக்கு இந்த வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. நிதி ஒதுக்கீடும் இல்லை. எல்லோரும் இயற்கை விவசாயத்தை நாடிச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைய பட்ஜெட்டில் அதற்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. தேர்தல் அறிக்கையில் தென்னை விவசாயிகளுக்கு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. நீரா போன்ற பதநீர் இறக்கப்படும் என்றார்கள். ஆனால் பட்ஜெட்டில் அதுதொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. காவிரி குண்டாறு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மேகேதாட்டு பற்றி பட்ஜெட்டில் எந்த தகவலும் இல்லை. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றோம். அது தொடர்பான எந்த விதமான அறிவிப்பும் இல்லை. இதேபோல் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு இந்த அரசு முயற்சி எடுக்கவில்லை. இந்த அரசு செயல்படாத அரசு என்பதற்கு இதுவே உதாரணம். சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. கிராமப்புறங்களுக்கு முக்கியதத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டை பொறுத்தவரைக்கும் விவசாயிகளுக்கு பலனில்லை. திட்டம் எதுவும் இல்லை. வேளாண் கல்லூரி சார்ந்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட் இது. பிற மாநில ஒத்துழைப்பை இந்த அரசு நாட வேண்டும். அதிமுக ஆட்சி இருந்த தெலங்கானா மற்றும் ஆந்திர முதல்வர்களைச் சந்தித்து நீரை பெற்றது. ஆனால் திமுக அரசு எந்த மாநில முதல்வர்களையும் சந்திக்கவில்லை" என்று விமர்சனம் செய்தார். வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள் வாசிக்க > மண் வளம் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் @ தமிழக வேளாண் பட்ஜெட்
TN வேளாண் பட்ஜெட் | விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 13:01:00
சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். அதில், “விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அது சார்ந்தா அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்: பயிர்க் காப்பீடு: இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் அதிகம் பாதிப்படைந்த தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக 14 கோடியே 55 இலட்சம் 9,988 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் உடனடியாக வழங்கப்பட்டது. 2024-2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்: ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால், 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023 2024-ஆம் ஆண்டு முதல் 2027-2028 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் இரண்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2024 2025 ஆண்டிலும் 65 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க கோர்ட் உத்தரவு
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-20 12:55:00
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16-ல் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வேளாண் பட்ஜெட் | 10 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு; ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 12:37:00
சென்னை: “10 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பில், “புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு ஆகியன அதிகரிக்கும். எனவே, நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற கடந்த மூன்று ஆண்டுகளில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2024-2025-ம் ஆண்டில் சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு), கொல்லிமலை மிளகு (நாமக்கல்), மீனம்பூர் சீரக சம்பா (இராணிப்பேட்டை), ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்), உரிகம்புளி (கிருஷ்ணகிரி), புவனகிரி மிதி பாகற்காய் (கடலூர்), செஞ்சோளம்(சேலம், கரூர்), திருநெல்வேலி அவுரி இலை (திருநெல்வேலி), ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை (தேனி), செங்காந்தள் (கண்வலி) விதை (கரூர், திண்டுக்கல், திருப்பூர்) ஆகிய 10 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும்.” இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள் வாசிக்க > மண் வளம் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் @ தமிழக வேளாண் பட்ஜெட்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 12:35:00
சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். அதில்,“கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். முக்கிய அம்சங்கள்: கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்: ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்று முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்ற நோக்கில், முதன்மைத் தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்தி, நிகர சாகுபடிப் பரப்பை அதிகரித்திட தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி விவசாயிகளுக்குத் தந்திட 'கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' எனும் திட்டம் 2021- 2022ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025ஆம் ஆண்டிலும், இத்திட்டம், தேர்வு செய்யப்பட்ட 2,482 கிராம ஊராட்சிகளில், 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
மண் வளம் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் @ தமிழக வேளாண் பட்ஜெட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 12:00:00
சென்னை: சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். அதில், “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" என்ற புதிய திட்டம், 2024- 2025ஆம் ஆண்டில், 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்”எனத் தெரிவித்துள்ளார். முக்கிய அம்சங்கள்: மண் வளத்தைக் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 2024- 2025 ஆம் ஆண்டில் 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு; பசுந்தாள் உரம்: மண்ணில் கரிம கார்பன் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் சரிவிகிதத்தில் இருந்தால் மட்டுமே நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகி, பயிர்களுக்கு ஊட்டச்சத்துகள் எளிதாகக் கிடைக்கப்பெற்று மகசூல் அதிகரிக்கும். எனவே, பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில், ஆயக்கட்டு, இறவைப் பாசனப் பகுதிகளில், முதற்கட்டமாக 2024- 2025-ஆம் ஆண்டில் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், தமிழ்நாட்டிலுள்ள 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர். மண்புழு உரம்: மண்புழு உரம் வளமான ஊட்டச் சத்துகளை வழங்குவதோடு மட்டுமின்றி, மண்ணின் தன்மையையும் மேம்படுத்துகிறது. எனவே, மண்புழு உரம் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்திட ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வீதம் 10,000 விவசாயிகளுக்கு வழங்கிட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள் அமைத்து, தொடர்ந்து மண்புழு உரம் தயாரிக்க ஏதுவாக, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். களர் அமில நிலம்: களர் நிலத்தில், மண் இறுகியும் காற்றோட்டம் இல்லாமலும், அமில நிலத்தில் நுண்ணுயிர்ச் செயல்பாடுகள் குறைந்தும், பயிர் வளர்ச்சியும், மகசூலும் குறைந்தும் காணப்படுகிறது. இதனைச் சீர்செய்யும் பொருட்டு, 37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்ப்படுத்த 7 கோடியே 50 இலட்சம் ரூபாயும், 37,500 ஏக்கர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும்.
கந்துவட்டி கொடுமையால் அரசு ஊழியர் தற்கொலை; நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 11:08:00
சென்னை: கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், சூதாட்டக் கும்பல் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவரான பூவழகன், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தசாமி ஆகியோரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டி சேர்த்து, வாங்கிய தொகையை விட பல மடங்கு பணம் செலுத்திய பிறகும் கூட, இன்னும் பணம் கேட்டு கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தசாமி ஆகியோர் மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் பூவழகனை கடத்திச் சென்ற அவர்கள், தங்களுக்கு சொந்தமான இடத்தில் முட்டி போட வைத்து கொடுமைப் படுத்தியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியும் அவமானப்படுத்தியுள்ளனர். அதைத் தாங்க முடியாமல் தான் கடந்த 12-ஆம் நாள் நஞ்சு குடித்து தற்கொலைக்கு முயன்ற பூவழகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். பூவழகனைப் போலவே மேலும் பல நூறு பேருக்கு கடன் கொடுத்து, அதற்கு கந்து வட்டி கேட்டு இந்த கும்பல் மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள், வணிகர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு சூதாட்டத்திற்கு அடிமையாக்கும் இந்த கும்பல், சூதாட்டம் விளையாடுவதற்காக லட்சக்கணக்கில் பணத்தை கடனாகக் கொடுத்து கந்து வட்டியை வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பூவழகனைப் போல மேலும் பலர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. பூவழகன் தற்கொலை செய்து கொள்ள முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கந்து வட்டி கும்பலைப் பிடித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் மிரமுகர்கள் தலையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியல் கட்சியினர் அளிக்கும் துணிச்சல் மற்றும் ஆதரவில் தான் கந்துவட்டி கும்பல் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுகிறது. இதை அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது. மருந்தாளுனர் பூவழகன் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பலை காவல்துறை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 10:44:00
சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். முன்னதாக சட்டப்பேரவை சபாநாயகர் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான அறிவிப்பை வாசிக்க தொடர்ந்து வேளாண் துறைக்கான பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய அம்சங்கள்: ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு. தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு. கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும். பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம். சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு. ஈரோடு கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு. இவ்வாறாக அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வழங்கி நிறைவு செய்தார். முன்னதாக அமைச்சர் பட்ஜெட் உரையை திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.